கிழக்கு தமிழர்களின் நன்மை கருதி அனைவரும் இணைந்து செயற்படுவோம் -பிரசாந்தன் அழைப்பு

தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாப்பதற்காகவும் அபிவிருத்திகளைசெய்வதற்காகவும் அரசாங்கத்துடன் இணக்க ஆட்சியை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை செய்யும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமோக வெற்றியீட்டியதை தொடர்ந்து இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தியது.இதில் கலந்துகொண்டு கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்து தெரிவித்தார்.

கிழக்கு தமிழ் மக்களின் நலன்கருதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று கிழக்கு மாகாணத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய ஒருநாள்.மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்ந்து அதிகளவான வாக்குகளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு வழங்கியுள்ளனர்.வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.

இன்று மட்டக்களப்பில் பாரிய சாதனை செய்யப்பட்டுள்ளது.தலைவர் சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தெளிவூட்டல் செய்யப்படவேண்டும்,ஜனநாயக ரீதியாக கிழக்கு மக்களின் இருப்பினை பாதுகாத்துக்கொண்டு முன்நோக்கிச்செல்லவேண்டும் என்ற நோக்குடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை ஆரம்பித்திருந்தார்.மிக குறுகிய காலத்தில் ஆரம்பித்து நாங்கள் பாராளுமன்றம் செல்லவிருக்கின்றோம்.

எந்த நோக்கத்திற்காக மக்கள் எங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்களோ அந்த நோக்கம் நிறைவேற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நிச்சயமாக பாடுபடும்.இது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு கிடைத்தவெற்றியல்ல.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கிடைத்தவெற்றி.

எமது தலைவர் சந்திரகாந்தன் சிறைச்சாலையில் இருந்து 54198 வாக்குகளைப்பெற்று மட்டக்களப்பில் பெரும் சாதனையினை நிலைநாட்டுவதற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.அவரது வாக்கினைக்கூட அளிக்கமுடியாத நிலையில் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர்.

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையால்வதும் ஏனைய அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும் வழக்கமாக இருக்கின்ற விடயம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் அதிக ஆசனங்களைப்பெறவேண்டும் என்று நாங்கள் எங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தோம்.அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.நான்கு ஆசனங்களை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொடர்ந்தும் அரசியல் ரீதியாக தெளிவடைந்தவர்களாக செயற்படவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களின் இருப்பினை நிலைப்படுத்துவதற்காக இணைந்து பயணிக்க நாங்கள் தயாராகியிருக்கின்றோம்.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு நிலைப்படுத்தப்படவேண்டும் என்பதே எமது ஒரோ நோக்கமாகும்.