பாலமீன்மடு பகுதியில் மக்களை அச்சுத்தி வந்த முதலை மக்களால் பிடிக்கப்பட்டது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது.

நேற்று மாலை பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 12அடி நீளமான குறித்த முதலையானது நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த முதலை தொடர்ச்சியாக அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்ததுடன் அப்பகுதியில் உள்ள ஆடு வளர்ப்பாளர்களின் ஆடுகள்,கோழிகள்,நாய்களை பிடித்துசென்றிருந்ததாகவும் இதுவரையில் 17க்கும் மேற்பட்ட ஆடுகளை குறித்த முதலை இழுத்துச்சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமும் குறித்த அச்ச நிலைமையின் மத்தியிலேயே ஆற்றுக்கு மீன்பிடிக்க செல்வதாகவும் கரையில் பதுங்கியிருந்து முதலை அச்சுறுத்தல் விடுத்துவந்தாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குவந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுரேஸ் தலைமையிலான குழுவினர் குறித்து முதலையினை அங்கிருந்து மீட்டுச்சென்றனர்.