ஆற்றுவாய் வெட்டமுடியாது –தீர்மானம் நிறைவேற்றிய அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை மற்றும் மீனவர்களின் நிலையினை கருத்தில்கொண்டு ஆற்றுவாயைவெட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆற்றுவாய் பகுதியை அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த சிலர் வெட்டியதை தொடர்ந்து அது தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக சில பகுதிகளில் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அதன் காரணமாக மட்டக்களப்பு ஆற்றுவாயை வெட்டி நீரை வெளியேற்ற உதவுமாறு நீர்பாசன திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று கூடி ஆராய்ந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் ஆற்றுவாயைவெட்ட முடியாது என திணைக்கள தலைவர்கள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆற்றுவாய் வெட்டுவதற்கு ஏற்று சூழ்நிலையில்லையென்று தெரிவிக்கப்பட்டு அது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று இரவு அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த சிலர் மட்டக்களப்பு ஆற்றுவாயிக்கு வந்து அதனை வெட்ட முற்பட்ட நிலையில் அதனை அப்பகுதி மீனவர்கள் தடுத்த நிலையில் அதன்போது முறுகல்நிலையேற்பட்டதை தொடர்ந்து பொலிஸார் மற்றும் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் தலையீட்டால் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸன் தலைமையில் இது தொடர்பில் கூடி ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தில் நீர்பாசன திணைக்களம்,அனர்த்தமுகாமைத்துவ திணைக்களம்,மீன்பிடித்திணைக்களம்,விவசாய திணைக்களம்,சுற்றாடல்திணைக்களம் உட்பட திணைக்கள தலைவர்கள்,இரு மாவட்டங்களின் விவசாய சங்க உறுப்பினர்கள்,மீன்பிடி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் பெருமளவான விவசாய செய்கைகள் அழிந்துள்ளதாகவும் கிட்டங்கி ஆற்றின் ஊடான வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாகவும் கிட்டங்கியானது மட்டக்களப்பு வாவியுடன் தொடர்புபட்டதனால் மட்டக்களப்பு ஆற்றுவாய் வெட்டப்படும்போது தமது வயல்நிலங்களை பாதுகாக்கமுடியும் என தெரிவித்தனர்.அத்துடன் தற்போது கதிர்பருவமாக காணப்படுவதனால் நீர் நிரம்பியுள்ளதன் காரணமாக அறுவவடைசெய்யமுடியாதநிலையுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஆற்றுவாய் என்பது இயற்கையான ஒரு பகுதியெனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படும்போதே அது தொடர்பில் சிந்திப்பதாகவும் ஆனால் அக்காலப்பகுதியிலும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே இதனைவெட்டுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் தற்போது மிகவும் வறட்சியான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையிலும் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மட்டக்களப்பு வாவினை நம்பியிருக்கும் நிலையில் ஆற்றுவாய் வெட்டும்போது பாதிப்புகள் ஏற்படவாய்ப்புள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் மாவட்டம் தற்போது குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஆற்றுவாய் வெட்டுவதனால் மாவட்டம் கடும் குடிநீர் பிரச்சினைகளையும் எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அனைவரது கருத்தினையும் ஏற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் ஆற்றுவாய் வெட்டுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியதுடன் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் கருத்தில்கொள்ளப்பட்டு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆற்றுவாய் வெட்டுவதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து உணர்ந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கவேண்டும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸன் தெரிவித்தார்.