இணைந்து பணியாற்றவருவமாறு ஜி.கே.அறக்கட்டளை தலைவர் அழைப்பு

ஜி.கே.அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு சேவை செய்வதற்கு எமது மக்களை நேசிப்பவர்கள் முன்வரவேண்டும் என ஜி.கே.அறக்கட்டளையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ஜி.கே.அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

2017ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி ஜி.கே.அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் இலவச அமரர் ஊர்தி சேவை ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 550க்கும் மேற்பட்ட உடலங்களை இலவசமாக கொண்டுசென்று உறவினர்களிடம் வழங்கியுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் இதன் சேவை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வறிய நிலையில் உள்ள குடும்பத்தினை சேர்ந்த ஒருவர் இறக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கஸ்டங்களை கருத்தில்கொண்டு இந்த இலசவ அமரர் ஊர்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் இன்றியமையாத வகையில் உருப்பெற்றுள்ள ஜி.கே.அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஜி.கே.அறக்கட்டளையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜி.கே.அறக்கட்டளையின் செயலாளர் சட்டத்தரணி கே.தவராஜா உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிர்நீர்த்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.இதன்போது செயலாளரினால் விசேட அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.