39 கிலோமீற்றர் நீளமான வடிகான்களை தூய்மைப்படுத்த பொதுமக்களின் ஆதரவை கோரும் மாநகர முதல்வர்


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 39 கிலோமீற்றர் நீளமான வடிகான்களை தூய்மைப்படுத்தவேண்டியுள்ளதாகவும் அதற்கு பொதுமக்களின் ஆதரவும் தேவையென மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மழைகாலங்களில் ஏற்படுகின்ற வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு எதுவாகவுள்ள இயற்கை நீரோட்ட வடிகான்களை துப்பரவு செய்து அவற்றை சீரமைக்கும் பணிகளின் இரண்டாம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், வடிகான்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுனரிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் நேற்று இந்த பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இரண்டாம் நாள் இன்றைய தினத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி அனுராதா யகம்பத்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் வருகைதந்து வேலைத்திட்டத்தினை பார்வையிட்டனர்.

மழை காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெள்ள அனர்த்ததினை மாநகரசபைக்குள் கட்டுப்படுத்தவும் நீர் தேங்கி நிற்பதனால் ஏற்படும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசேகர,மாநகரசபை ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.