மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குள் வீதி ரேகைகளின் அளவு நிர்ணயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்களின் நன்மை கருதி மீழ பரிசீலனை செய்யுமாறு மாநகர சபை உறுப்பினர் புஷ்பராஜ் ரூபராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 34 ஆவது சபை அமர்வானது இன்று 11.06.2020 (வியாழக்கிழமை) காலை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்வமர்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்ககளில் பல்வேறு இடங்களிலும் குறிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள வீதிரேகை எல்லைகளை மீள் பரிசீலித்து, தற்காலத்திற்கு பொருத்தமான எல்லைகளை நிர்ணயம் செய்து கொள்வதற்கான பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய போதே இவ் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ,
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி அப்போதிருந்த நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வீதிகளின் ரேகை அளவுகள் சாத்தியம் இல்லாத அளவுகளை விட அதிகமான அளவுகளில் குறித்துக் காட்டப்பட்டுள்ளன.
இதனால் பொது மக்கள் கட்டட அனுமதிகளைப் பெறும் போதும், மதில்களை அமைப்பதற்கான அனுமதிகளை பெறும் போதும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக குறைந்த அளவு நிலப்பரப்பினை கொண்டவர்கள் இவ்வாறான நடைமுறைகளால் அனுமதி ஒன்றினை பெற இயலாத நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
அத்துடன் பிரதான வீதிகளுக்கு இருக்க வேண்டிய அதே அளவுகளே குறுக்கு வீதிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி பிரசுரமாகியுள்ளது. உதாரணமாக கூழாவடி 1ஆம் குறுக்கு 8ஆம் குறுக்கு வரை உள்ள வீதிகளுக்கு பிரதான வீதியொன்றின் அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று மாநகருக்குள் பல வீதிகளின் வீதிரேகை அளவுகள் மீழ் பரிசீலனை செய்யவேண்டு என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இது தொடர்பில் மாநகர ஆணையாளர், பொறியியலாளர் உள்ளிட்ட தொழிநுட்ப குழுவினருடன் கலந்தாலோசித்ததன் பின் வீதிரேகை அளவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என இந்த பிரேரணையினை முன்வைப்பதாகவும் இதற்கு அனைத்து உறுப்பினர்களினதும் அங்கீகாரத்தினையும் வேண்டி நிற்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொதுமக்கள் இது தொடர்பில் தம்மிடமும் பல முறைப்பாடுகளை முன் வைப்பதாகவும் எனவே நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் தொழிநுட்ப வல்லுனர்களையும் இணைத்து குழு ஒன்றினை அமைத்து அவர்களுடன் இணைந்த கள பிரிசீலனைகளுக்கு பின் வீதிரேகைகளின் அளவுகளை மீழ் பரிசீலனை செய்ய உத்தேசித்து இருப்பதாகவும் எனவே இதனை ஓர் தீர்மானமாக இந்த சபை நிறைவேற்றி தந்தால் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து உறுப்பினர்களின் ஏகமனதான சம்மதத்துடன் சபையில் குறித்த பிரேரணையானது தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.