பூர்வீக குடிகள் தாம் தான் என்று நிருபிக்க சிங்களவர்கள் முயற்சி : கம்பன் விழாவில் முதல்வர் சரவணபவன்

எங்களது வரலாற்றினை திரிவுபடுத்தி மேலதிக்க சமுகங்கள் தாம் தான் பூர்வீக குடிகள் என்று நிருபிக்க பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் எதுவும் பதிலளிக்காது மௌனமாக இருக்கும் போது, அவர்கள் கூறுவது தான் உண்மை என்ற நிலைப்பாடு உருவாகி வருகின்றது. என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவின் நிகழ்வுகள் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இவ்விழவின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று (03.02.2020)  மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு தலைமையினை ஏற்று உரையாற்றிய போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்.

பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் ஐயம், இலங்கைக்கும் கம்பருக்கும் என்ன தொடர்பு? இலங்கைக்கும் இந்தியாவுக்கும் என்ன உறவு? இலங்கைத் தமிழர்கள் வந்தேறு குடிகளா? இதை தெளிவுறுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

அதிலும் அதை ஆதாரபூர்வமாக நிருபிக்க வேண்டும். அதுவே எமது நிலைப்பினை உறுதிப்படுத்துவதாக அமையும்.
குறிப்பாக தமிழர் வரலாறு என்றாலே மர்மம்தான். அதுவும் 20,000ம் வருட வரலாறு என்றால் சொல்லவா வேண்டும்!

உண்மையில் கடற்கோள்களினால் அழிந்த எமது வரலாற்றை அறிந்தால், அது உலக வரலாற்றையே மாற்றும்.
அப்படி அழிந்து போன எமக்கே உரித்தான கண்டம்தான் குமரிகண்டம் அதாவது லெமூரியா கண்டம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்,  இங்குதான் நம் மூதாதையர் வாழந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

“நாவலன் தீவு” என்றும் அழைக்கப்பட்ட குமரிக்கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம்தான்.
ஏழுதெங்க நாடு
ஏழுமதுரை நாடு,
ஏழுமுன்பலை நாடு,
ஏழுபின்பலை நாடு,
ஏழுகுன்ற நாடு,
ஏழுகுனக்கரை நாடு,
ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன.

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளன. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன .
தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையதுதான். நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் தோன்றிய இந்தக் கடலடியில் உள்ள தென் மதுரையில் கி.மு 4440இல் பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை அனைத்துமே அழிந்து விட்டன .

இரண்டாம் தமிழ்ச் சங்கம் ‘கபாடபுரம்’ நகரத்தில் கி.மு 3700இல் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன . இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 இல் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
இந்த வரலாற்றினை எல்லோரும் கூறுவது போல் கதையாக சொல்லி விட்டு கடந்து போகாமல் சற்று அறிவியல் ரீதியாகவும் பார்ப்போம்.

புவி ஓட்டில் நகரும் தட்டுகள் உள்ளன. இவை மலைத் தொடர்களின் எரிமலை இயக்கத்தால் உண்டாகின்றன. இதை நாம் அறிவோம். 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து இந்து மா கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில் தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

முதலாவதாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் (Ultra-Sonic Probing) தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத் தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள்.அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை 1960 – 1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரை படங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது.

அரபிக் கடலுக்குத் தெற்கில் இலட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சர்கோஸ் ஆர்கிபிலாகோ (Chagos Archipelago) வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது.

‘லெமோரியா கண்டம்’ (Lemuria Continent) இந்துமாக் கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் (Geologist: Philip Sclater) விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமோரியா குரங்குகளை (Lemurs) எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் (Fossils of Lemurs) ஆபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜேர்மன் டார்வின் வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel) ஆதி லெமோரியாவின் உயிர் மூலவிகள் (Genes) யாவும் இந்து மாக் கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமோரியா கண்டம் ஒன்று அங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

உயரிய தொழில்நுட்பம் செறிந்த கணினி வடிவமைப்புகள் ஊடாக எந்தெந்தக் காலத்தில், எந்தெந்தக் கடற்கரைகள் எவ்வாறு இருந்தன என்று காட்டக்கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் தான் “கிரௌன் மில்ன்”.
இவர், மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளைப் பார்த்துவிட்டு 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வால் மாமல்லபுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படக் கூறியுள்ளார்.

அதற்கேற்றாற்போல் தமிழ்நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள் காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது.

இத்தகவலை பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி 2002 பெப்ரவரி 11, 18, 25 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியும் உள்ளது.

அறிஞர் ஓல்டுகாம் அவர்கள், சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தாகவும் கூறுகின்றார்,
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்ததாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன என்றும் கூறுகின்றனர்.

பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா.சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, அவுஸ்திரேலியாவுடன் பப்புவா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திராவுடன் ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந்திருந்தன என்று கருதப்படுகிறது.

இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு குறிப்பு பலரால் கூறப்படுகின்றது.

இலங்கை தமிழகத்ததுடன் இணைந்திருந்தது என்பதற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல் மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது.
அத்தோடு திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றது தாமரபரணி நதி, இதன் மறு பெயர் இங்குள்ள பலர் அறிந்திருப்பீர்கள் பொன்பரிப்பு, இந்த நதியை சங்ககாலத்தில் பொருணை நதி என்று குறித்துள்ளார்கள்.
இந்த தகவல் அப்படியே இருக்க,

இப்போது எமது புத்தளத்திற்கு வருவோம், எமது நாட்டில் உள்ள புத்தளம் எனும் பிரதேசத்தை ஒத்த இதே பெயரையும் உடைய புத்தளம் எனும் பிரதேசம் தென்னிந்தியாவிலும் காணப்படுகின்றது. இரண்டு புத்தளத்தினுடைய புவியில் தன்மைகளும் ஒரே மாதிரியானவைதான்.
அதாவது கடலோடு இணைந்த பிரதேசம், களப்பு சார்ந்த உப்பு வறண்ட பிரதேசம், கண்டல் தாவரங்களும் நிறைந்த ஓர் இடம் ஆக இதனைக் கொண்டு ஆய்வாளர்கள் கடல்கோளிற்கு முன்னர் இந்தியாவும் இலங்கையும் இணைந்த நிலத்தொடர்பைக் கொண்டிருந்தன என்று சுட்டிக்காட்டுகின்றார்கள்.

அவர்கள் இதற்கு மேலதிகமாக பொன்பரிப்பு நதி எனும் தாமிரபரணி நதி புத்தளத்தை ஊடறுத்து சென்றது என்றும் கூறுகின்றார்கள்.
இவற்றையெல்லாம் மையப்படுத்தி பொன்பரிப்பு எனும் பெயர் மருவி கொம்பரிப்பு ஆனதென்றும் நிருபிக்க முட்படுகின்றார்கள் ஆய்வாளர்கள்.

மேலும், இலங்கையானது குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காணப்பட்ட மலைப்பிரதேச நாடுகளில் ஒன்றாகும், எனவேதான் குமரிக் கண்டம் மூழ்கியபோதும் இந் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. தட்டுக்கள் உள்நோக்கி குவிந்துள்ளமையை இதற்கான சான்றாகவும் கொள்ள முடியும்.
பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் எனவும் கூறியுள்ளான். இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து.

இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேசிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோ இல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறுகள்.

நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் தெரிந்து கொள்ள முடியும்.

இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.
இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்
– சயம்பன்
– சயம்பனின் மருமகன் யாளிமுகன்
– ஏதி
– ஏதியின் மகன் வித்துகேசன்
– வித்துகேசனின் மகன் சுகேசன்
– சுகேசனின் மகன் மாலியவான்
– மாலியவான் தம்பி சுமாலி
– குபேரன்
இராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்தமேலே கூறப்பட்ட சுமாலியின் மகள் கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும்.

ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்களின் படி சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.
சரி எப்படி இந்த கதையை நம்புவது ?

அதற்கான ஆதாரமாக நன் முன்வைக்கப்போகும் முதலாவது ஆதாரம் என்னவென்றால் இலங்கையைச் சுற்றி ஐந்து திசைகளிலும் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் . இந்த சிவாலயங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றை உற்றுநோக்கினால் , இவை அனைத்துமே சுமார் 3500-4500 ஆண்டுகாலப் பழமையானவை .

தமிழ் மன்னர்களான மூத்தசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள் .
இராஜராஜ சோழனும், பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள். இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர்நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

அப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சிசெய்த யாரோ ஒரு சிவ பக்தனால்தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா ?

அப்படியாயின் முழு இலங்கைத் தீவையும் நல்ஆட்சிசெய்த, அங்கு வாழ்ந்த மக்களை நேசித்த, அவர்கள் வழிபடவும், அவர்களைக் காக்கவும், தானும் வழிபாடு செய்யவும் அந்த சிவாலயங்களை நிறுவிய சிவ பக்தன் தான் இராவணன்.

இராவணனின் மனைவி பெயர் கதைகளில் மண்டோதரி என்றுள்ளது. உண்மையில் இயற்பெயர் வண்டார்குழலி.இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா

இராவணனின் மறைவுக்குப் பின்னர் விபிசணன் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்டதாகவும், அவன் தனது ஆட்சி மையத்தை களனிக்கு மாற்றியுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதையொற்றியே களனியில் அமைந்துள்ள ஒரு பௌத்த விகாரையில் விபிசனனுக்கு சிலையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.

இராவணன் கோட்டை, இராவணன் குன்று, சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்ததுள்ளது.இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ, அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆம் நூற்றாண்டில் தமிழ் மன்னனாகிய காசியப்பனால் மேலும் மெருகூட்டப்பட்டு பாதுக்காக்கப்பட்டது சிகிரிய குகை குன்று . அந்த குகைகளினுள் வரையப்பட்ட ஓவியங்கள் அந்த பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ் குடிகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதி பலிக்கின்றது. அந்த பகுதிகளில் வாழ்ந்த பூர்வக்குடி தமிழர்களால் வரையப்பட்டவை.

இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம். ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே. அதுமட்டுமல்ல தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து விட்டு ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தும் விட்டார்கள்.

யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
இலங்கை வாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon – நவரட்ணம்
Kingdom of Jaffna Pathmanathan
Early Settlements in Jaffna Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்
இவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதி உள்ளார்.

முழு குமரிக்கண்டத்தை இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன
விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் சைவாலயங்கள் பல இருந்துள்ளன.

History of Jaffna 1884 S.Kasishetty
Jaffna Today and Yesterday 1907 Duraiyappa Pillai
History of Jaffna 1912 Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை
Ancient Jaffna 1926 Rajanagam
Critiques of Jaffna 1928 Gnanappiragasar
Tha Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils: இவை எல்லாம் இதற்குரிய வரலாறுகள்

குறிப்பாக திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினரான நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது.

அத்துடன் கதிர்காம முருகன் ஆலயம், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலயம் - போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் பின்னாளில் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது.

இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்று அமைந்துள்ளன.
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலை மீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.

இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஆதாரங்கள் அழிக்கபட்டுவிட்டன.

எமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் ராவணன் சிங்கள இனத்தவன் என்று வந்தேறிகளான சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல வெளிக்கிட்டு விட்டார்கள்.
தமிழ் இனமே விழித்துக்கொள்!

சிங்களவர்கள் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுபோல் மகாவம்சம் பல பொய்கள் நிறைந்த வரலாற்று பதிவு என்பதை ஏற்றுக்கொள்வர்களா?
முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரிய நாடு இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும், நாகரும் ஆவார் ஆரிய மொழி இலங்கையில் அறியப்படுவதற்கு முன்பு தமிழ் மொழியைத்தான் பேசிவந்துள்ளனர்.

இலங்கையில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்து மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பதாகும்.

விஜயனின் முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறது. விஜயன் இலங்கைக்கு வர முன்னரே இலங்கையில் தமிழ் மக்களின் மூதாதையினர் நாகரியம் அடைந்த ஒரு இனமாக சிவ வழிபாடு செய்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர். பின் விஜயனோடு வந்த பிராமணர்கள் இலங்கையில் ஐந்து திசைக்கு சென்று அங்கிருந்த சிவாலயங்களுக்கு பூசைகள் செய்ததாகவும் அறியமுடிகிறது.

அத்துடன் 7ஆம் நூற்றாண்டோடு சம்மந்தப்பட்ட திருகோணமலையில் உள்ள அகத்தியரின் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு கதிரவெளியில் உள்ள எச்சங்கள் என எமது பூர்விகத்தை கூற விளையும் அனைத்து ஆதாரங்களும் முறையாக பாதுகாக்க முடியாமல் வேறு நபர்களின் திரிவுபடுத்தலுடன் வரலாறு மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றமை கவலையளிக்கின்றது.

இந்த வரலாற்றை தேடிக் கற்கும் ஆற்றலும், நேரமும் இனிவரும் தலைமுறைக்கு இல்லாமலே போய்விடும். எனவே தான் எனது சிந்தையில் உதித்த விடயத்தினை தங்கள் அனைவரினதும் கவனத்திற்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

எங்களது உண்மையான வரலாற்றையும், எமது இலக்கியங்களையும் நாம் ஆவணமாக்க வேண்டும் அதிலும் இன்றைய நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் அதாவது இப்போதைய 3D தொழிநுட்பத்தில் நாம் முயற்சி செய்வோம், இந்திய சினிமா பாணியை அடியொற்றி எதிர்கால சந்ததியினருக்கு எங்களது வீர வரலாறுகளையும், இலக்கியவான்களின் அதி உச்ச படைப்புகளையும் கொண்டு செல்வோம். இதற்காக உங்கள் ஆதரவினையும், ஆலோசனைகளையும் வேண்டி நிற்கின்றேன்.

ஓர் உள்ளுராட்சி மன்றம் ஒன்றின் தலைவராக எமது பொது நூலகத்தினை 3D Auditorium  ஆக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளேன். உள்luர் தொழிநுட்ப வல்லுனர்களைக் கொண்ட ஓர் IT குடும்பம் எம்மோடு தொண்டர் அடிப்படையில் இணைந்து செயற்பட்டு வருகின்றது அவர்களின் துணையுடனும், வரலாற்று ஆய்வாளர்களின் உதவியுடனும் முதற்கட்டமாக எமது மாவட்டத்தில் ஆட்சி செய்த சிற்றரசர்களின் வரலாறுகள், ஊர்களின் சிறப்புகள் என்பவற்றை ஆவணமாக்கி அதை 3D வடிவில் படமாக்கி குறித்த Auditorium த்தில் காட்சிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதேபோல் மருவிவரும் கலைகளை எதிர்காலச் சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வகையில் மாநகர சபையில் கலை கலாசார நிலையியற் குழு ஒன்றினை உருவாக்கி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் பொது வெளியில் அவற்றை மேடையேற்றி வருகின்றோம். இது ஓர் சாதாரண உள்ளுராட்சி மன்றம் ஒன்றினை வைத்துக் கொண்டு எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ள பணி.

இதேபோல் இந்த நாட்டில் வந்தேறு குடிகள் தமிழர்கள் அல்லர் என்பதற்கான சான்றுகளை வைத்து ஆவணப்படுத்தலுக்கான பணிகளை மேற்கொள்ள அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

இது எமது பூர்வீகம் தொடர்பான பல சந்தேகங்களுக்கு பதிலாய் அமைவதோடு சர்வதேச ரீதியாக இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை விடயங்களிலும் சாதகத்தினை ஏற்படுத்தும் என்றே நான் கருதுகின்றேன்.

இறுதியாக, எங்களது வரலாற்றினை திரிவுபடுத்தி மேலதிக்க சமுகங்கள் தாம் தான் பூர்வீக குடிகள் என்று நிருபிக்க பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் எதுவும் பதிலளிக்காது மௌனமாக இருக்கும் போது, அவர்கள் கூறுவது தான் உண்மை என்ற நிலைப்பாடு உருவாகி வருகின்றது.

எது எதிர்காலத்தில் எமது இருப்பு தொடர்பில் ஆபத்தான விளைவுகளை உருவாக்கி விடும். எனவே இங்கிருக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொடர்புடைய கல்வியாளர்கள் இவர்களுக்கு எதிராக தக்க பதில்களையும், ஆதாரங்களையும் வழங்க முன்வர வேண்டும். என தெரிவித்தார்.