72வது சுதந்திர தினத்திலும் மட்டக்களப்பில் உறவுகளுக்காக வீதியில் இறங்கிய உறவுகள்

கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் நடைபெற்றது.
இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியில் ஐந்தூறுக்கும் மேற்பட்ட காணாமல்போனவர்களின்உ றவினர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சுதந்திர தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாகையை ஏற்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 04 அது தமிழ் மக்களின் கரி நாள் போன்ற பதாகைகளையும் கறுப்புக்கொடிகளையும் ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் அந்த சுதந்திரத்தினை சிங்கள மக்களே அனுபவித்துவருவதாகவும் தமிழ் மக்கள் தொடர்ந்து போராடியே வருவதாகவும் இங்கு கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களை கடந்துள்ளபோதிலும் இதுவரையில் காணாமல்போன ஒருவருக்கு கூட நீதியை பெற்றுக்கொடுக்க எந்த அரசும் முன்வரவில்லையெனவும் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.

யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த இன்றைய ஜனாதிபதி கோத்தபாய அவர்களே காணாமல்போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் உள்ள நிலையிலும் அதில் இருந்து விலகி பொறுப்பற்ற வகையில் கருத்துகளை தெரிவித்துவருவதாகவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

துமக்கான நீதி கிடைக்கவேண்டுமானால் சர்வதேசம் தலையிடுவதன் மூலமே அதனைப்பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.