மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு-நாக மரமும் நடப்பட்டது

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அரச திணைக்களங்களில் இன்று காலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று காலை தேசிய சுதந்திரன தின நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையில் 72வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

நாட்டுக்காக உயிர்நீர்த்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மும்மதங்களின் வழிபாடுகள் நடைபெற்றன.

ஆதனை தொடர்ந்து பிரதேச செயலாளரின் உரையினை தொடர்ந்து பசுமையான நாட்டினை கட்டியெழுப்புவோம் என்னும் திட்டத்திற்கு அமைய மர நடுகையும் சிரமதான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பிரதேச செயலகத்தில் இலங்கையின் தேசிய மரமான நாக மரத்தின் மரக்கன்று ஒன்றும் பிரதேச செயலகத்தில் நடப்பட்டது.
மர நடுகையினை தொடர்ந்து சுற்றாடலின் தூய்மையினை பேணும் பொருட்டு சிரமதான நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரசாந்தன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்பட உத்தியோகத்தகளும் கலந்துகொண்டனர்.