வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களை தேடி உதவும் ஶ்ரீநேசன் MP

 நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களிற்கான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் குறித்த பிரதேச மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட முறுக்கன்தீவு, சாராவெளி மற்றும் பிரம்படித்தீவு கிராமங்களுக்கு இன்று (08.12.2019) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் குறித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பட்ட நிதியிலிருந்து உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்ததோடு அவர்களுக்கான அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளையும் அரச அதிகாரிகள் ஊடாக பூர்த்தி செய்து வைத்தார்.

நிலத்தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் தாம் பல இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியில் இருந்து இத்தகைய உதவிகளை வழங்கி வைத்தமையை இட்டு பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இம்முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட முறுக்கன்தீவு கிராமத்தில் 57 குடுப்பங்களைச் சேர்ந்த 203 பேரும், பிரம்படித்தீவு கிராமத்தில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேரும், சாராவெளி கிராமத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.