மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

உன்னிச்சை கிராமத்துக்கு குடிநீர் ; மகிழ்ச்சியில் மக்கள்

பல வருடங்களாக உன்னிச்சைப்  பிரதேச மக்கள் எதிர் நோக்கிவந்த குடிநீர் பிரச்சனை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அயராது முயற்சி செய்து தமது குடிநீர் தேவையினை நிறைவேற்றி வைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீறிநேசனுக்கு உன்னிச்சை மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் நீரானது சுத்திகரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிலோ மீற்றர்களுக்கு  அப்பாலிலுள்ள இடங்களுக்கும் அனுப்பப்பட்டு வருக்கின்றது.

இருந்தும் அக்கால ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற திட்டமிடலின் காரணமாக  உன்னிச்சையை அண்டிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படாமையால் குறித்த பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்தனர்.

குறிப்பாக வறுமைக்கோட்டிக்கு  கீழ் வாழும் குடும்பங்களை கொண்ட இக் கிராம மக்கள் தமக்கான  குடிநீர் தேவையினை நிறைவேற்றி தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனிடம்  வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினரால் கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், பல்வேறு அமைச்சர்களிடம்  விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக கிடைக்கப்பெற்ற நிதிகளைக் கொண்டு நீர் வழங்களுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், உன்னிச்சையை அண்டிய கிராமங்கள் மட்டுமன்றி செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கொடுவாமடு போன்ற கிராமங்களுக்கும் குடிநீர் வசதிகளை வழங்கக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில் உன்னைச்சை கிராமத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தமக்கான குடிநீர் வசதிகளைச் செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு உன்னிச்சை கிராம மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதன் பொது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தமது கோரிக்கையினை ஏற்று உன்னிச்சை மக்களின் தாகம் தீர்க்க உயர் அழுத்த நீர்ப்பம்மி நிலையத்தினை அமைக்க நிதி உதவி அளித்த முன்னைய மீள் குடியேற்ற அமைச்சின்‌ செயலாளர் உள்ளிட்ட தொழிநுட்ப உத்திக்கத்தர்களுக்கும், இணைப்பு வேலைகளுக்கு நிதியுதவி அளித்த   நகர திட்டமிடல் மற்றும்  நீர் வழங்கல் அமைச்சு உள்ளிட்ட அதிகார சபையின் உத்தியோகத்தர்கள்  மற்றும் மாவட்ட பொறியியலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், உழியர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாவும் . உன்னிச்சைக் கிராம  மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வவுணதீவிலுள்ள நீர் வழங்கல் அலுவலகத்திற்கு தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலமாக ஆயித்தியமலை சந்தி தொடக்கம் உன்னிச்சை வரையான கிராம மக்கள் குடிநீர்  இணைப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்  எனவும்  இலவச இணைப்புகளைப் பெறக்கூடியவர்களும், கட்டணம் செலுத்தி இணைப்புகளைப் பெறக்கூடியவர்களும் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தோடு, கரடியனாறு, பதுளை வீதி மற்றும் மண்முனை மேற்கு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளின் குடிநீர் வழங்கப்படாத ஏனைய கிராமங்களுக்குமான குடிநீர் வழங்கலுக்கான  திட்டங்களும் ஏற்கனவே செயற்படுத்த தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.