மட்டக்களப்பில் வெள்ளத்தினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவும் சுவிஸ் உதயம் அமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்த பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

வெள்ளம் காரணமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவும் அன்றாடம் கூலித்தொழில் செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இவ்வாறானவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண உபசெயலாளருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் விமலநாதன் மற்றும் கிராம சேவையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட,சீரற்ற காலநிலையினால் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.