மட்டக்களப்பில் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழுவின் மண்டலப்பெருவிழா

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழுவின் மண்டலப்பெருவிழா இன்று மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெற்றது.

சபரிமலை சாஸ்தா ஐயப்ப சுவாமியின் மகரஜோதியை முன்னிட்டு மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபை மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழுவினால் ஐயப்ப சுவாமிக்கான பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
இதன் முக்கிய நிகழ்வான மண்டலப்பெரு விழா இன்று காலை கோலாகலமான முறையில் நடைபெற்றது.
அதிகாலை மஹா கணபதி ஹோமம் நடைபெற்று தொடர்ந்து அபிசேக ஆராதனைகள் நடைபெற்று பஜனாமிர்தம் மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றன.
சிவயோகச்செல்வன் சிவஸ்ரீ சாம்பசி சிவாச்சாரியரினால் பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் ஐயப்ப மாலையணிந்த பக்தர்களுக்கு பாத நமஸ்காரமும் செய்யப்பட்டது.
இன்றைய மண்டல பெருவிழா பூஜையில் யாழ்ப்பாணம், வவுனியா,திருகோணமலை,மட்டக்களப்பு,பாண்டிருப்பு உட்பட வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.