வெருகல் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவிஸ் உதயம் உதவிக்கரம்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் இன்று பிற்பகல் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கே இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு மாவடிச்சேனை பொது நூலக கட்டிடத்தில் வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம்,சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் எத.விமலநாதன்,செயலாளர் க.வரதராஜன்,அச்சங்கத்தின் உபசெயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து மீள தமது பகுதிக்கு திரும்பிவரும் நிலையில் சுவிஸ் உதயம் அமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் கீழ் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெருகல் ஆற்றின் நாதன்ஓடை பகுதியில் ஏற்பட்ட உடைப்பினால் மாவடிச்சேனையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.

இதன்காரணமாக வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 87 குடும்பங்களுக்கு இன்று நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.