கிழக்கு மாகாண கராத்தே போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள்

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்க மாணவர்கள் அதிகளவான பதக்கங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கிழக்கு மாகாண கராத்தே சங்கத்தின் கராத்தே சுற்றுப் போட்டியானது சனிக்கிழமை வாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

நேற்று மாலை வரையில் நடைபெற்ற இந்த கராத்தே போட்டிக்கு மட்டக்களப்பு அம்பாறை திருகோணாமலை மாவட்டங்களில் இருந்து பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தில் இருந்து பங்குகொண்ட மாணவர்கள் 68 பதக்கங்களைப்பெற்று 99வீத வெற்றி சாதனையை படைத்துள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் வகையிலான நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு அரசடியில் உள்ள சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பிரதான போதனாசிரியர் கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார் அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் கே.குகதாசன்,பி.டேவிட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வடகிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் பாடசாலை ரீதியாக கலந்துகொண்டு தங்கப்பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ள மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் மாணவனும் சிவானந்த தேசிய பாடசாலை மாணவனுமான சி.வசந்தன் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் கிழக்கு மாகாண கராத்தே சங்கத்தின் கராத்தே சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் 40மாணவர்கள் தங்க பதக்கத்தினையும் 17மாணவர்கள் வெள்ளிப்பதக்கத்தினையும் 11மாணவர்கள் வெண்கல பதக்கத்திiனையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இவர்களும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் பெற்றோர் பழைய மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.