கடந்த ஆட்சியை விமர்சனம் செய்து வாக்குகளைபெற்றவர்கள் இன்று அவர்களின் சரணாகதி –சிறிநேசன் எம்.பி.

கடந்த காலத்தில் யுத்ததினைப்பற்றியும் அதனால் காணாமல்ஆக்கப்பட்டவர்கள், கொலைசெய்யப்பட்டவர்கள் பற்றியும் கடந்த ஆட்சியாளர்கள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை செய்து தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றவர்கள் இன்று அவர்களிடமே சரணாகதி அடைந்து கொள்கையற்ற அரசியலை மேற்கொண்டுவருவதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீண்டும் கொடுமையான யுகத்திற்கு செல்லாமல்,மீண்டும் கஸ்டங்களை அனுபவிக்காமல் இருக்கின்ற ஜனநாயக சூழலை இழந்துவிடாமல் பாதுகாக்கவேண்டும் என தெரிவித்தார்.

புத்திரிகையாளர்கள்,புத்திஜீவிகள் படுகொலைசெய்யப்பட்ட காலத்தினை நாங்கள் சிந்தித்துப்பார்க்கவேண்வேண்டும்.மீண்டும் இந்த யுகத்தினை ஏற்படுத்தப்போகின்றோமா இருக்கின்ற இவ்வாறான ஜனநாயக சூழலை மேலும் பலப்படுத்திக்கொள்ளப்போகின்றோமா என்பதை தெளிவாக சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் ஸ்ரீசித்தி நாதர் நாகம்பாள் அறநெறிப்பாடசாலையின் ஆண்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று காலை நடைபெற்றது.

ஸ்ரீசித்தி நாதர் நாகம்பாள் அறநெறிப்பாடசாலையின் தலைமை ஆசிரியரும் ஸ்ரீசித்தி விநாயகர்,நாகம்பாள் ஆலயங்களின் பிரதமகுருவுமான சிவஸ்ரீ மு.க.உதயகுமாரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர்,பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள்,கிராம முக்கிஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவட்ட,மாகாண,தேசிய ரீதியில் அறநெறிப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தல் காலம் பரபரப்பான செய்திகள், உண்மையான செய்திகள், பொய்யான செய்திகள்,கொள்கை அடிப்படையிலான,கொள்கையில்லாத செய்திகள், அன்றொரு செய்தி, இன்றொரு செய்தி ….தேவையற்ற விதத்தில் கொள்கைகளை மாற்றிக் கொள்கின்றவர்களெல்லாம் இருக்கின்றனர்.

அன்று யுத்தத்தைப் பற்றியும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் பற்றியும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றியும் கடும் தொனியில் பேசி கடந்தகால ஆட்சியாளர்களை படுமோசமாக விமர்சித்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டவர்கள் இன்று அவர்களின் கால்களில் சரணாகதியடைந்து கொள்கையற்ற அரசியலை நடத்திக்கொண்டிருக்கின்ற போக்கினை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் மறதியுள்ளவர்களும் அல்லர்,நன்றி கெட்டவர்களும் அல்லர், ஏமாற்றப்படக்கூடியவர்களும் அல்லர். சாராயப் போத்தல்கள்,பணம் என்பன சிலவேளைகளில் தாராளமாக வீசப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. சாராயப்போத்ததலின் போதை குடித்த ஒருநாளில் முடிந்து விடும். கிடைக்கின்ற ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரு நாளில் முடிந்து விடும். ஆனால் பிழையான முடிவுகளை நாங்கள் எடுப்போமானால் ஐந்து ஆண்டுகளுக்கு அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். சிலவேளைகளில் பத்து ஆண்டுகளுக்கு அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும்.

2005ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று நாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு முடிவை எடுத்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த முடிவிற்கு சாதகமாக இருந்தது. நாங்கள் எடுத்த அந்த முடிவால் ஏற்பட்ட விளைவுகள் உங்களுக்குத் தெரியும். ஒருவர் வெற்றி பெற்றார். ஆந்த வெற்றியின் பின்னர் நாங்கள் பட்ட துன்பங்களெல்லாம் எமக்கு ஞாபகத்தில் இருக்க வேண்டும். 2005இல் நாங்கள் எடுத்த முடிவின் காரணமாக எங்களுடைய விடுதலை இயக்கத்தையும் நாங்கள் இழந்து நிற்கின்றோம்.

கடந்த காலங்கள் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். குடந்தகால படிப்பினைகளை நாங்கள் மறந்துவிட்டால் நாங்கள் கத்துக்குட்டிகளாகவே இருக்க வேண்டும். குத்துக்குட்டிகள் எனப்படுபவர்கள் அரசியல் பற்றி தெரியாதவர்கள் புரியாதவர்களாவர்.

நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்றது. சிலவேளைகளில் எங்களுடைய தெரிவு என்பது கடந்தகால படிப்பினைகளை கவனமாக மனதில் வைத்து முடிவுகளை எடுக்க வேண்டும். மதுமயக்கத்தில் எடுக்கின்ற முடிவுகளும் பணநோட்டுகளுக்காக எடுக்கின்ற முடிவுகளும் எங்களை மிகமோசமான நிலைக்கு தள்ளக்கூடியதாக இருக்கும்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கின்ற கத்தரிக்காய்களுள் நஞ்சுகள் அதிகமாக இருக்கும். அதில் பூச்சிகள் குத்தியிருக்காது. நமது மக்கள் அதனை விரும்பி வாங்குவார்கள். ஏனென்றால் அதில் புழு குத்தவில்லை என்பதற்காகவாகும்.

ஆனால் அதில் நஞ்சுகள் அதிகமாக இருக்கும். புழு குத்தியிருக்கின்ற கத்தரிக்காய்களில் புழுத்தாக்கமுற்ற பகுதியை வெட்டியெறிந்துவிட்டு சமைக்கின்றபோது நமது உடலில் நஞ்சு சேராது. நஞ்சூட்டப்பட்ட மரக்கறிகளால் சிலவேளைகளில் மரணமும் ஏற்படலாம். அதேபோன்றுதான் தேர்தலிலும் இப்படிப்பட்ட தெரிவுகள் இருக்கின்றன. உள்ளவற்றுள் நல்லது எது என்பதை தெரிவு செய்ய வேண்டும். நூற்றிற்கு நூறுவீதம் எல்லாம் நல்லதாக இருக்கும் என நான் சொல்லவில்லை. கூடுதலான வரையில் எமது மக்கள் ஒரு கொடுமையான யுகத்திற்குப் போகாமல் கஷ்டங்களை மீண்டும் அனுபவிக்காமல் இருக்கின்ற ஜனநாயக சூழலை இழந்துவிடாமல்
கடந்த காலத்தில் பத்திரிகையாளர்கள்,புத்திஜீவிகள் கொல்லப்பட்டனர். இது எந்தக்காலத்தில் நடந்தது என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். மீண்டுமொரு மோசமான யுகத்திற்கு நாம் செல்லப்போகின்றோமா இருக்கின்ற சுதந்திரமாக சூழலில் தொடர்ந்தும் செயற்படப்போகின்றோமா என்பதை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். கூலிக்கு மாறடிப்பவர்களாகவோ மதுபோத்தல்களுக்கு ஏமாறுபவர்களாகவோ இருக்காமல் பணநோட்டுகளுக்காக விலைபோகின்ற சந்தைப் பொருட்களாக இருக்காமல் நாங்கள் செயற்படவேண்டும்.

எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் கூடவுள்ளது.அதன்போது தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.அதன் பின்னர் நாங்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் அறிவிக்கப்படும்.