காணியற்றவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை –காணி சீர்திருத்த ஆணைக்குழு

இலங்கையில் காணியற்ற அனைவருக்கும் காணிகளை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பத்மஸ்ரீ லியனகே தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணியற்ற மக்களின் காணிப்பிரச்சினையை தீக்கும் வகையிலான காணி கச்சேரியொன்று இன்று காலை முதல் மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு –திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த காணி கச்சேரி இன்று காலை முதல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காணியற்றவர்களுக்கு காணிகளை காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மூலம் வழங்கும் வகையில் இந்த காணிகச்சேரி நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு –திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளர் கே.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பத்மஸ்ரீ லியனகே,காணிபிரிவிற்கான பணிப்பாளர் என்.வன்னியாராட்சி,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய தினம் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு காணி கச்சேரிகள் நடாத்தப்பட்டதாகவும் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாசவினால் வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு –திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளர் கே.விமல்ராஜ் தெரிவித்தார்.

நாளைய தினம் திருகோணமலை மாவட்ட மக்களுக்கு காணிகச்சேரி மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய லியனகே,

காணி சீர்திருத்த ஆணைக்குழுவானது 40வருடமாக இலங்கையில் இயங்கிவருகின்றது.வறிய மக்களுக்கான காணிகளைப்பெற்றுக்கொடுக்கும் நோக்குடனேயே இது இயங்கிவருகின்றது.

இதற்கமைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாகவும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவின் வழிகாட்டலிலும் காணியற்ற 10இலட்சம்பேருக்கு காணிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.

குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் தங்களுக்கு உரிமையான காணியொன்றை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையினையே எமது ஆணைக்குழு மேற்கொண்டுவருகின்றது.காணியற்றவர்களுக்கு 20பேர்;ச் வீதம் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.