காணாமல்போன சிறுமியை தேடும் கடற்படை

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து 16 வயது சிறுமியொருவர் தற்கொலை செய்தகொள்ளும் நோக்கில் ஆற்றில் குதித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் கல்லடி பாலத்தில் தொடர்ந்து தேடுதல்நடவடிக்கைகளை கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை சிறுமி ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து குறித்த நிலையில் அவரைக் காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து தேடியபோதும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமற்போயுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி, 2 குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு ஆற்றில் குதித்துள்ளார்.

குறித்த சிறுமி க.பொ.த. சாதாரணதரத்தில் கல்வி கற்று வருகின்ற நிலையில் சம்பவ தினமான நேற்று பகல் 12 மணியளவில் மட்டக்களப்பு நகருக்கு சென்று விண்ணப்பம் ஒன்றை நிரப்புவதற்காக செல்வதாக வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் என்ற இளைஞனை காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் சம்பவதினமான பிற்பகல் 2 மணியளவில் கல்லடி பாலத்தருகில் சந்தித்து பேசியுள்ளனர்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிறுமி பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.குறித்த சிறுமியை தேடும் பணிகளை இன்றைய தினமும் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன் குறித்த காதலன் கைது செய்யப்பட்டதோடு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.