இணக்க அரசியலே கிழக்கு மாற்று இனத்திற்கு செல்ல காரணம் -கூறுகின்றார் சுரேஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலே இன்று கிழக்கு மாகாணம் மாற்று இனத்திற்கு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மாமானிதர் குமார் பொன்னம்பலத்தின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு வவுணதீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுணதீவு காஞ்சரம்குடா புளியடி சந்தியில் நேற்று இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர்தூவி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சியின் செயற்பாட்டாளர் வினோ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், கட்சியின் மாவட்ட செயலாளர் க.ஜெகநீதன், நிர்வாக பொறுப்பாளர் சிவலிங்கம் சிவசுதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழினத்தின் உரிமைக்காக குரல்கொடுத்த அமரர் குமார் பொன்னம்பலம், கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி தலைநகர் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே மேற்கொண்டுவருகின்றது.இன்று கிழக்கு மாகாணம் தமிழ் மக்களிடம் இருந்து முற்றாக இல்லாமல்செய்யும் நிலையுருவாகியுள்ளது.

இதற்கான முழுப்பொறுப்பினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ளவேண்டும்.அவர்கள் செய்துவரும் இணக்க ஆட்சியே இந்த நிலமைக்கு காரணமாக அமைந்துள்ளது என இங்கு சுரேஸ் தெரிவித்தார்.