மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திருக்கார்த்திகை விளக்கீட்டு நிகழ்வு

திருக்கார்த்திகை விளக்கீடு நேற்று உலகெங்கும் உள்ள இந்துக்களினால் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

நேற்று மாலை இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் திருக்கார்த்தினை விளக்கீடு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை  திருவிழா சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வந்து ஆலய முன்றிலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த திருவிழாவில் பெருமளவான அடியார்கள் கலந்தகொண்டனர்.

இதேபோன்று வீடுகளிலும் வீதிகளிலும் அடியார்கள் திருவிளக்கு ஏற்றி திருக்கார்த்திகை விளக்கீட்டை அனுஸ்டித்தனர்.



திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"யை அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.