நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது…
(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)

நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எந்த விதத்திலும், எந்தப் பக்கத்தில் இருந்தும் இன, மொழி,  மத சாயங்கள் பூசப்படக் கூடாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

07ம் திகதி இடம்பெறும் செயற்பாட்டு முடக்க போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதோடு, இன, மத, மொழி கடந்து அனைத்து மக்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

புல்லுமலையில் அமைக்கப்படவுள்ள போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

றொமன்ஸியா லங்கா பிறைவட் லிமிடட் எனும் நிறுவனமானது புல்லுமலையில் நிலத்தடி நீரை எடுத்து போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது என்கின்ற விடயம் இப்பிரதேசத்தில் வாழுகின்ற எல்லா மக்களின் கரிசினையையும் ஈர்த்துள்ள ஒன்றாகும்.

கிராமம் சார்ந்த ஒரு பிரதேசத்தில் முக்கிய வளங்களாக மரம், மண், நீர் என்பன இடம்பெறுகின்றன. வனவளம் அழிக்கப்படுவது தொடர்பாக மக்களின் பாதிப்புகள், எதிர்ப்புகள் என்பன உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் கூட சட்டவிரோதமாக இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் உள்ள சிலருடைய அனுசரணையோடு தொடர்ந்தும் அவை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. மண்வளத்திற்கும் இதே நிலைதான்.

நீர்வளம் இது வரை இந்த ஒரு ஆபத்து நிலைக்கு உட்படவில்லை. ஆனால் குறித்த இந்த நிறுவனத்தின் செயற்பாடு இப்பிரதேசத்தின் நீர்வளத்திலும் அபாயக் குறியைக் காட்டுவதற்கான தொடக்கமாக அமைந்துள்ளது.

இந்த விடயத்தில் எல்லா மனிதர்களும் ஒரே கருத்தைக் கொண்டவர்களாகவே இருக்க  வேண்டும். இந்த நிறுவனத்தை நடத்துபவர் அல்லது அந்தக் குழுமம் தனிப்பட்ட  நபராக அல்லது குழுமமாகவே கருதப்பட வேண்டும். இதற்கு எந்த விதத்திலும், எந்தப் பக்கத்தில் இருந்தும் இன, மொழி,  மத சாயங்கள் பூசப்படக் கூடாது. இது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும்.

குடிநீர் விநியோகம் என்ற செயற்பாடு அதிகளவான ஊற்றுப்பகுதியில் இருந்து செயற்படுத்துவதுதான் உகந்ததாகும். அங்கிருக்கின்ற ஊற்று வற்றாத ஊற்றாக இருக்கும். ஆனால் தாழ்நிலத்தில் அதாவது சமதரையில் இத்தகைய வாய்ப்பு இல்லை. இந்த விடயத்தை நாங்கள் எழுந்தமானமாகவோ கற்பனையாகவோ அல்லது இதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானது என்ற அடிப்படையிலோ இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

இந்தியாவிலே இவ்வாறு நிலத்தடி நீரைப் பாவித்ததன் காரணமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழகம், பஞ்சாப், ஆந்திரா என்பன முறையே 01,02,03 இடங்களில் இருக்கின்றன. 2007ம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் பின்வரும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது 87 வீதமான கிணறுகளின் ஆளம் அவை அமைக்கப்பட்ட போது இருந்த ஆளத்தை விட குறைந்து காணப்படுகின்றது. இவற்றில் 35 வீதமான கிணறுகளில் 2 மீட்டர் வரை நீரின் அளவு குறைந்துள்ளது. 24 வீதமான கிணறுகளில் 4 மீட்டர் வரை நீரின் அளவு குறைந்துள்ளது. 28 வீதமான கிணறுகளில் 4 மீட்டருக்கு மேல் நீரின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறு 77 வீதமான நிலத்தடி நீர்வளம் அழிக்கப்பட்டுள்ளது என ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது. இந்த விதத்தில் இந்த நிறுவனமும் இவ்வாறு நிலத்தடி நீரைக் கொண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது நாளொன்றுக்கு 20000 லீட்டர் நீர்ப் பயன்பாடு அவர்கள் திட்டத்தில் உள்ளது. இதனை மேற்பார்வை செய்வதற்கான எவ்வித வழிமுறையும் இல்லை. மண் அகழ்வின் போதும் இத்தகைய நிலைமையே பின்பற்றப்படுகின்றது. அனுமதிப்பத்திரங்களில் பல்வேறு விதமான மட்டுப்பாடுகள் இருந்த போதிலும் கூட இவை உதாசீனம் செய்யப்படுகின்றது. இது தொடர்பான முறைப்பாடுகளை உரிய அதிகாரிகள் சரியான முறையில் ஏற்று மேற்பார்வை செய்வதில்லை. இந்த நிலைமையே இந்த நிலத்தடி நீர் பயன்பாட்டிலும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தச் செயற்பட்டின் போது தற்போதே நீர்வளம் குறைவாக உள்ள புல்லுமலைப் பிரதேசம் உடனடியாகப் பாதிக்கப்படுகின்ற அதேவேளை அப்பிரதேச குளங்கள் மற்றும் நீர்வளங்களும் பாதிப்புக்களாகுவதோடு முழு மாவட்டமும் இந்தப் பாதிப்பின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்த விடயத்தில் நிலத்தடி நீர்வளம் தொடர்பாக சுற்றுச் சுழல் திணைக்களம் மற்றும் புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கத் திணைக்களம் (புளுஆடீ) ஆகிய நிறுவனங்கள் துல்லியமாகச் செயற்பட்டுள்ளன என்ற கூறமுடியாதுள்ளது.

இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களின் அதிருப்திகள் ஏற்கனவே பல தடவைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் இது தொடர்பான கண்டங்களைத் தெரிவித்ததோடு குறித்த நிறுவனத்தினரை அழைத்து இதன் பாதிப்புகள் தொடர்பில் விளக்கி இச்செயற்பாட்டை கைவிடுமாறு தெரிவித்துள்ளனர். இருப்பினும் தாம் சட்டமுறையில் எல்லா அனுமதிகளையும் பெற்றுள்ளதாகக் கூறிக் கொண்டு குறித்த நிறுவனம் அவர்களது செயற்பாட்டைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அவர்கள் ஒரு தொழில் நிறுவனம் என்ற ரீதியிலே அவர்களது வருமானம் தொடர்பில் சிந்திப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த வருமானமானது இந்தப்பிரதேசத்தை முற்றிலும் அதன் இயற்கைத் தண்மையில் இருந்து காவு நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியது எனகின்ற விடயத்தை இந்த நிறுவனத்தினர் மனங்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே விடப்பட்ட நியாயமான கோரிக்கைகளை அனுமதியைப் பெற்றுவிட்டோம், அரசியல் பலம் இருக்கின்றது என்ற அடிப்படையில் உதாசீனம் செய்வது மனிதத்துவத்திற்கு மாறானதாகும்.

எனவே குறித்த நிறுவனத்தினர் தங்களுடைய செயற்பாட்டை மாற்றுத் திட்டம் ஒன்றின் மூலம் செயற்படுத்துவதே உகந்தது. நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை மனிதத்துவப் பார்வையிலோ மதத்துவப் பார்வையிலோ ஏற்றுக் கொள்ள முடியாது.

இதன் விளைவுகள் தொடர்பில் அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். அவ்வாறு அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் அதனை  மேற்கொள்வதற்கு முன்வந்தும் இருக்க மாட்டார்கள் எனவும் நம்புகின்றோம். எனவே தற்போது இதனைக் கௌரவப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாது, தங்கள் மூதலீடு தொடர்பில் அச்சம் கொள்ளாது மனிதாபிமான அடிப்படையில் தங்கள் திட்டத்தை வேறொன்றாக மாற்றி செயற்படுவது சிறப்பு.

இரக்கமற்ற வெனிஸ் நகர வணிகன் தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு கடன் பட்டவரின் உடம்பில் இருந்து இறைச்சியை அறுத்தெடுக்க முற்பட்ட செயற்பாடானது மனிதத்துவத்திற்கு மாறானது என்ற ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வணிகன் என்ற ஆங்கில இலக்கியக் கதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே நாங்கள் திட்டமிட்ட படியே தான் செய்வோம் என்ற அடம்பிடிக்காமல் இத்திட்டத்தை மாற்றியமைக்க முன்வருவீர்கள் என்றால் இப்பிரதேச மக்களின் வாழ்த்துக்களுக்கு உரித்தாகுவீர்கள்.

இது தொடர்பில் இப்பிரதேச மக்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 07ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுக்கும் செய்பாட்டு முடக்கப் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவிப்பதோடு இன, மத, மொழி கடந்து அனைத்து மக்களையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இயற்கை வளத்தைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒத்துழையுங்கள், குறித்த நிறுவனத்தினர் அவர்களின்  நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள், உங்கள் மனங்களை மனிதாபிமானம் வெற்றி கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.