கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வந்த உபகரணங்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றம் -மக்கள் எச்சரிக்கை

அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பழமையான வைத்தியசாலைகளில் ஒன்றாக கருதப்படும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு என ஒதுக்கீடுசெய்யப்பட்டு வழங்கப்படும் சில முக்கிய மருத்துவ உபகரணங்கள் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது தொடர்பில் அப்பகுதியில் உள்ள பொது அமைப்புகள் கடும் அதிர்ப்தி தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூறு வருடங்கள் பழமையானதும் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு 45 வருடங்களைக் கடந்த நிலையில் 413 நோயாளர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் வசதி வாய்ப்புக்கள் இங்கு உள்ளன.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் ரேடியோலொஜி பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருவதுடன் 24 மணிநேர நிரந்தர வைத்திய ஆலோசகர் சேவையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பல இன்னல்கள் சவால்களுக்கு மத்தியில் கல்முனை ஆதார வைத்தியசாலை க்கான மிகவும் வசதிநிறைந்த அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ள இந்த நிலையில் அதற்கு வரவழைக்கப்பட்ட அவசரப்பிரிவிற்கான உபகரணங்கள் யாவும் திட்டமிடப்பட்டு அயலிலுள்ள வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.ஆனாலும், குறித்த பிரிவு இயங்குவதற்கான கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீ.ரி.ஸ்கானிங் இயந்திரம் அதற்கு அருகில் உள்ள இன்னுமொரு வழங்கப்படுவதற்கும் சமையலறை கட்டடமொன்றினுள் தற்காலிகமாக செயற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகமும் தமது ஆட்சேபனையினை பதிவுசெய்துள்ள நிலையில் குறித்த சம்பவத்திற்கு எதிராக பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளும் கடும் ஆட்சேபனைகளை தெரிவித்துவருகின்றனர்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் போர் காலங்கள் கடுமையான சிரமத்தின் மத்தியில் கடமையாற்றிய குறித்த வைத்தியசாலையினை மேம்படுத்துவதற்கு பதிலாக தமது அரசியல் பலத்தினைக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கையெடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் ஒன்றுசேர்ந்து போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலையேற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தமிழ் அரசியல்வாதிகள் கூடுதல் கரிசனை காட்டவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.