கூட்டு என்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதில் களமும் கண்டவர்கள் நாங்கள்…கூட்டு என்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதில் களமும் கண்டவர்கள் நாங்கள்…

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)

எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால் அது எவ்வாறு செயற்படுத்தப்படப் போகின்றது என்ற விடயம் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உடன்படிக்கையைப் பார்க்கும் போது தான் தெரியும்.

 கூட்டு என்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதில் களமும் கண்டவர்கள் நாங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஓரிடத்தில் சந்தித்துக் கலந்துரையாடியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் நாங்கள் அங்கு கலந்து கொண்டோம்.

அங்கு பொதுச் சின்னம் தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

எல்லாத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முகங்கொள்வதன் மூலம் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருப்பதற்குரிய வழிவகைளை காணமுடியும் முடியும் என்றும் அதன் மூலம் அதிஉச்ச தமிழ்ப் பிரதிநிதிகளைப் பெற முடியும் என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

 இதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றை அமைத்துக் கொண்டு தொடர்ந்து இதற்காக வேலை செய்ய வேண்டும் என்றும் இதற்காக நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றோம்.

இதனடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை வரைவதாகவும் அந்த ஒப்பந்தம் எல்லாக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

அவ்வாறு புரிந்துணர்வு உடன்படிக்கை அனுப்பி வைக்கப்படுகின்ற போது எமது கட்சி மட்டத்திலே அதனைப் பரிசீலனை செய்து எமது அபிப்பிராயங்களைத் தெரிவிப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் நாங்கள் ஏற்கனவே ஒரு கூட்டாகச் செயற்படுகின்றோம் என்ற அடிப்படையில் கூட்டு என்கின்ற முயற்சியிலே நாங்கள் ஈடுபட்டு அதில் களமும் கண்டிருக்கின்றோம்.

எமது இந்தக் கூட்டில் பலரும் சேர்ந்து கொள்வதை நாங்கள் வரவேற்கின்றோம். எனவே கூட்டு என்பது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் தமிழர்களுக்குத் தேவை என்பதை நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம்.

இந்த தேர்தலின் பின்னர் தான் இவ்வாறான நிலை இருக்கின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்த வரையில் 60 வீதம் வட்டாரம், 40 வீதம் பட்டியல் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 40 வீதத்திற்கும் அதிகமானவர்களாக இருந்தார்கள்.

குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளில் இருப்பவர்கள் கூட அங்கத்துவத்தைப் பெற்றிருக்கின்றார்கள்.

அவர்கள் தற்போது தாங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்கள் என்ற விதத்திலே அரசியலில் ஈடுபட முற்படுகின்றார்கள்.

இவை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும்.

அவ்வாறு எமது மக்களின் வாக்குகள் சிறிது சிறிதாக சிதறடையாமல் இருப்பதற்கான வழிவகையாக எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற பொதுக் கொள்கையொன்று இப்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இது எவ்வாறு செயற்படுத்தப்படும், யார் வழிநடத்துவார்கள் என்பதெல்லாம் தற்போதும் ஒரு வெற்றிடமாகத் தான் இருக்கின்றது.

 இதற்கு ஒரு முடிவைக் காண்பதும் மிகவும் முக்கியமானது. எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது.

 ஆனால் அது எவ்வாறு செயற்படுத்தப்படப் போகின்றது என்ற விடயம் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உடன்படிக்கையைப் பார்க்கும் போது தான் தெரியும் என்று தெரிவித்தார்.