மட்டக்களப்பின் அழகை பறந்து ரசிக்க வழங்கப்பட்ட சந்தர்ப்பம்

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முகமாக உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவையினை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (24) மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்றது.

யுத்தம் நிறைவடைந்த நிலையில் வடகிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக இந்த உலங்கு வானூர்தி சுற்றுலா சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மாநகரசபை உறுப்பினர் திருமதி பல்தசார், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவாரும் கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் உறுப்பினருமான எம்.செல்வராசா, மட்டக்களப்பு விமான நிலையத்தின் முகாமையாளர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சுற்றுலாத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிப் படியாக உள்ளுர், வெளியூர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக இவ் உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவை அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அதிதிகள் வானூர்தியில் ஏறி மட்டக்களப்பு அழகைக் கண்டுகளித்தனர்.

இதன் அடுத்த கட்டமாக இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் உள்ளுர் விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது உள்ளுர் சுற்றுலா பயணிகளும் மிகவும் ஆர்வமாக இன்றைய தினம் இச்சேவையினைப் பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்ததின் பின்னர் மட்டக்களப்பின் அழகினை உலங்குவானூர்தி ஊடாக இரசிக்கும் வாய்ப்பு இன்று காலை மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.