தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம் விசாரணை!

 

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளதாக கூறி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரை  கொழும்பில் உள்ள பயங்கர வாதத் தடுப்பு பிரிவினர் அழைத்து  விசாரணை நடத்தியுள்ளனர். 

இன்று (16) காலை கொழும்பு 4ம் மாடியில்  உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான வா.கிருஸ்ணகுமார் அவர்களை பயங்கர வாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 

குறித்த விசாரணையின் போது விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட  முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுக்கும் உங்களுக்கும்  என்ன தொடர்வு? வெளிநாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அரசாங்கத்தை பற்றி தவறாக செய்திகளை அனுப்புகின்றீர்களாமே? புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளீர்களாமே? நீங்க விடுதலைப் புலிகளிடம் பயிற்சி எடுத்துள்ளீர்களா? உங்களது அமைப்பினால் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளீர்களாமே?  அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றீர்களாமே? உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டு கடுமையான தொணியில் விசாரணைகளை நடாத்தி அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில் 
 
இந்த நல்லாட்சி அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் இலங்கையிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நடந்த அதே நிலை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இந்த விசாரணைகள் மூலமாக எழுந்துள்ளது எனவும்.
 
இது போன்ற விசாரணைகள் மூலம் அரசாங்கமோ அல்லது அரசுக்குள் இருக்கின்ற வேறு அதிகாரிகளோ எதிர்பார்ப்பது வேறு .

அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை முடக்குவது. 

மட்டக்களப்பில் நடைபெறும் ஊழல்களையும் அரசாங்க அமைச்சர்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு, உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு செல்வதை தடுக்கும் நோக்குடனேயே என் மீது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் எங்களது ஊடக அமைப்பின் செயலாளர் நிலாந்தன் அவர்களை மட்டக்களப்பில் நடந்த ஊழல் செய்திகளை வெளிக்கொண்டுவந்தார் என்று கூறி அவர் மீது பொலிசார்,குற்றபுலனாய்வு பிரிவினர் பல தடவை விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

அதன் பின்னர் நாங்கள் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விபரங்கள் அடங்கிய கோப்புக்களை கொடுத்திருந்தோம். 

அத்துடன் ஊடகவியலாளர்கள் நடேசன், சிவராம் போன்றவர்களி படுகொலைக்கு நீதி வேண்டி கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தோம்.

அத்துடன் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவு தூபி ஒன்றை அமைப்பதற்காக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

இதைவிட முக்கியமாக புலனாய்வு துறையினர் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் செய்திகளை திரட்டும் போது பல தடவைகள் அவர்களை தடுத்து ஏசி திருப்பி அனுப்பியிருந்தோம்.

கடைசியாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை எமது அமைப்பின் ஊடாக தலைமை தாங்கி நடத்தியிருந்தோம்.

இத்தனைக்கும் பிறகே என்னை முன்னாள்  விடுதலைப் புலிகளுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்பு படுத்தி விசாரணை செய்துள்ளார்கள் என்றால் இது எமது செயற்பாட்டை முடக்கும் செயல். 
எம்மை விசாரணைகள் மூலம் அச்சுறுத்தி எமது ஊடக சுதந்திரத்தையும்,கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் முடக்கி உண்மைகள் வெளிவருவதை தடுக்கின்றன செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.