தளவாயில் காடுகளுக்கு தீவைப்பு-மட்டக்களப்பு மாநகரசபை தீயனைக்கும் பிரிவினால் கட்டுப்பாட்டுக்குள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தளவாய்,புன்னைக்குடா பகுதியில் உள்ள காடுகளுக்கு இனந்தெரியாத நபர்கள் தீவைத்ததனால் அப்பகுதி காடுகள் தீபரவும் நிலையேற்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் அப்பகுதியே புகைமண்டலத்தினால் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு எழுவான்கரை பகுதியில் காடுகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் புன்னைக்குடா மற்றும் தளவாய்,சவுக்கடி பகுதிகளிலேயே ஓரளவு காடுகள் அமைந்துள்ளன.

குறித்த காடுகளை பாதுகாக்கும் வகையில் குறித்த பகுதியை சேர்ந்த பொது அமைப்புகள் செயற்பட்டுவரும் நிலையில் அண்மைக்காலமாக குறித்த பகுதியை ஆக்கிமிக்கும் செயற்பாடுகளையும் சிலர் மேற்கொண்டுவருகின்றனர்.

தற்போதைய கால நிலையில் காடுகளை வளர்க்கவேண்டியதன் அவசியம் குறித்த ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் ஒரு சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக காடுகள் அழிக்கப்படும் நிலையும் இருந்துவருகின்றது.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நிலமையினை பார்வையிட்டதுடன் ஏறாவூர் பொலிஸாரும் வருகைதந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.