மட்டக்களப்பில் தேசிய சட்ட வார நிகழ்வுகள்

தேசிய சட்ட வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்,சட்ட உதவிஆணைக்குழு என்பன இணைந்து இந்த நிகழ்வுகளை நடாத்திவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 312 கிராம சேவையாளர்களுக்குமான நடைமுறை சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் கே.நாராயணம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் ஏ.உவைஸ்,சிரேஸ்ட சட்டத்தரணிகளான பே.பிரேம்நாத்,பி.சின்னையா,வி.வினோபாஇந்திரன்,ரி.தியாகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நடைமுறையில் கிராம சேவையாளர்கள் எதிர்நோக்கும் சட்ட நடைமுறைகள் தொடர்பில் சட்டத்தரணிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் தமது கடமையின்போது எதிர்நோக்கும் சட்டப்பிரச்சினைகள் தொடர்பிலான கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

இதேவேளை நாளை வெள்ளிக்கிழமை சட்ட வாரத்தினை முன்னிட்டு மட்;டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்படவுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.

தெரிவுசெய்யப்பட்ட 10 பாடசாலைகளில் இருந்து நூறு மாணவர்கள் இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று நாளை மறுதினம் சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்வு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.