Breaking News

தவறுசெய்யும் அரசியல்வாதிகளை பெப்ரவரி 10க்கு பின்னர் துரத்தியடிக்கும் அமைப்பு –ஜனாதிபதி மட்டக்களப்பில் திட்டவட்டம்

பெப்ரவரி 10ஆம் திகதிக்கு பின்னர் தவறுசெய்யும் அரசியல்வாதிகளை துரத்தியடிக்கும் வகையிலான தேசிய இயக்கம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒரு குடும்பமாக வாழ்கின்றோமென்று உலக நாடுகளுக்கு நாம் பறைசாற்ற வேண்டும்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி,வடமாகாண ஆளுனர் சிறிசேனகுரே,கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் மூன்று இன மக்களும் ஒன்றுபட்டு கைகோர்த்து வாழும் நிலையினை ஏற்படுத்தவேண்டும் என்பதே தனது கனவு என இங்கு தெரிவித்த ஜனாதிபதி அந்த கனநினை நிறைவேற்ற அனைவரையும் கைகோர்க்குமாறும் அழைப்பு விடுத்தார்.

கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களை நினைவுகூர்ந்த அவர் அந்த நிலைமை இன்று மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் விமர்சனங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் சுடப்பட்டு வீதியில் கிடந்ததாகவும் இன்று அவ்வாறான நிலையில்லாமல் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படும் நிலையேற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை வெற்றிபெறச்செய்து ஜனாதிபதியாக்கினிர்கள்.அதற்காக இன்றும் எனது நன்றியையும் கௌரவத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.நான் ஒருநாளும் செய்நன்றி மறப்பவன் அல்ல.கடந்த மூன்று வருடமாக உங்களுக்காக பல சேவைகளை செய்துள்ளேன்.அந்தவேலைத்திட்டங்கள் உங்கள் கிராமத்திற்குள் அல்ல.

என்னை ஜனாதிபதியாக்குவதற்கு முன்னர் இந்த நாட்டில் பல்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தன.யுத்தம் முடிவுற்ற பின்னரும் மக்கள் சந்தோசமாக வாழவில்லை.மூவின மக்கள் மத்தியிலும் ஒற்றுமை கட்டியெழுப்பப்படவில்லை.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு கஸ்டங்களும் நஸ்டங்களும் துன்புறுத்தல்களும் ஏற்படுத்தப்பட்டன.முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு கஸ்டங்களுக்கு ஏற்படுத்தப்பட்டன.அதன்காரணமாக உங்கள் தலைவர்களும் நீங்களும் அந்த ஆட்சியை நிராகரித்தீர்கள்.அந்த ஆட்சிக்காலத்தில் பலர் காணாமல்ஆக்கப்பட்டனர்.விடுதலைப்புலிகள் அல்லாத சாதாரண மக்கள் பலர் பாதையோரங்களில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பத்திரிகைகளில் உண்மையினை எழுதியவர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். 

தாஜுதீன்போன்ற சர்வதேச வீரர்களும் படுகொலைசெய்யப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் எவ்வாறு நடைபெற்றன என அனைவருக்கும் தெரியும்.

இந்த நாட்டில் அன்று ஜனநாயகம் இருக்கவில்லை,சுதந்திரம் இருக்கவில்லை,மக்கள் சந்தோசமாக வாழும் நிலையும் இருக்கவில்லை, அமைச்சர்கள் தமது சக அமைச்சர்களுடன் தொலைபேசியில் கூட பேசமுடியாத நிலையிருந்தது.அதேபோன்று அரசாங்க உத்தியோகத்தர்களும் சக உத்தியோகத்தருடன் தொலைபேசியில்பேசமுடியாத நிலையிருந்தது.அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்து தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்டனர்.இலங்கைக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துடன் குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தது.ஐநாசபை இலங்கை மீது அதிர்ப்திகொண்டது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றபோது சர்வதேச ரீதியில் உள்ள 200நாடுகளில் ஐந்து நாடுகள் கூட இலங்கையுடன் நட்பினைக்கொண்டிருக்கவில்லை.நான் பதவியேற்ற நாள் தொடக்கம் நான் உங்களை பார்க்கவரவில்லை,உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்கப்போயிருந்தேன்.ஐநா.சபை செயலாளர் நாயகத்தினை சந்திதேன்.எங்களது நாட்டினை கட்டியெழுப்ப உதவுகள் என்ற கோரிக்கையினை அவர்களிடம் முன்வைத்தேன்.

நாட்டில் காணாமல்போகும் சம்பவங்களை இல்லாமல்செய்வேன் என்று அன்று சர்வதேச நாடுகளிடம் நான் உறுதியளித்திருந்தேன்.மனித கொலைகளை நிறுத்துவேன் என்ற உறுதிமொழியை அவர்களுக்கு வழங்கினேன்.

கடந்த மூன்று வருடமாக இந்த நாட்டில் யாரும் காணாமல்ஆக்கப்படவில்லை, யாரும் அரசாங்கத்தினால் நடுத்தெருவில் கொலைசெய்யப்படவுமில்லை, ஊடகவியலாளர்கள் நடுத்தெருவில் கொலைசெய்யப்படவும் இல்லை,அவர்கள் நாட்டைவிட்டு செல்லவுமில்லை, அவை எல்லாவற்றையும் நான் நிறுத்தினேன். இன்று உலகத்திலுள்ள ரஷ்யா,சீனா,இந்தியா,பாகிஸ்தான்,மத்தியகிழக்கு நாடுகள் உட்பட அனைத்து நாட்டு தலைவர்களும் எங்களை மதிக்கின்றார்கள். மார்ச் மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் தேசிய மாநாட்டில் என்னை பிரதம விருந்தினராக கலந்துகொள்ளுமாறு பாகிஸ்தான் அரசினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் சார்பில் நான் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றேன்.

கடந்தவாரம் இந்தோனேஷிய ஜனாதிபதி இங்கு வந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் எங்களுக்கு நல்ல உதவிகளை வழங்கி வருகின்றார். எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நான் பங்களாதேஷிற்கு சென்றேன். அது எமக்கு நெருக்கமான சிநேகபூர்வமான நாடாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் கட்டார் நாட்டிற்கு சென்றிருந்தேன். அவர்கள் எமக்கு தாராளமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். உலகின் அனைத்து நாடுகளுடனும் நான் இப்போது சிநேகபூர்வமாக இருக்கின்றேன். எங்கள் நாட்டை முன்னேற்றுவதற்கு எல்லோரும் உதவியளிக்கின்றார்கள். நாங்கள் இந்த நாட்டிலே மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவகையில் பணியாற்ற வேண்டும்.

இந்த நாட்டிலே வாழ்கின்ற சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் எந்த பிரச்சனையுமில்லாமல் சந்தோசமாக வாழவேண்டுமென்று எனக்கு பெரியதொரு கனவு இருக்கின்றது. நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒரு குடும்பமாக வாழ்கின்றோமென்று உலக நாடுகளுக்கு நாம் பறைசாற்ற வேண்டும். சந்தேகம்,பயமில்லாமல் நம்பிக்கையோடு நாம் வாழவேண்டும். அதற்காக நாம் எல்லோரும் ஒன்றுபடவேண்டும்.
பெப்ரவரி 10ஆம் திகதி இந்த நாட்டில் புதிய மாற்றத்தினை புதிய வழியொன்றை ஆரம்பிக்கும் நன்நாளாகும்.உள்ளுராட்சிமன்றத்தில் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தவறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நான் இடமளிக்கமாட்டேன்.

அதிகாரத்திற்கு வருவோர் இந்த நாட்டினை கொள்ளையடிப்பதன் காரணமாகவே இந்த நாடு முன்னேறமுடியாத நிலையில் இருந்துவருகின்றது.எல்லோரும் அல்ல,பெருமளவானோர் கொள்ளையடிக்கின்றனர். உள்ளுராட்சிமன்றத்தில் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் கொள்ளையடிப்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.கொள்ளையடித்தால் அவர்களை வெளியேற்றிவிடுவேன்.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் எந்தளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டன என்பது அனைவருக்கும் தெரியும்.அதேபோன்று இன்றைய ஆட்சிக்காலத்திலும் ஓரு கூட்டம் சேர்ந்து களவாடியது அனைவருக்கும் தெரியும்.

எந்த கட்சியாக இருந்தாலும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயமாக நான் தண்டனை வழங்குவேன்.அரசியலுக்காக நான் நல்ல ஒரு அணியை உருவாக்குவேன்.மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய நாடுகளில் தவறுசெய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும்.அந்த தண்டனைகள் வழங்கப்படுவதனால்தான் அந்த நாடுகள் முன்னெறியுள்ளன.

எமது நாட்டில் அரசியல்வாதிகள் எவ்வளவுதான் கொள்ளையடித்தாலும் தண்டனை வழங்கப்படுவதில்லை.நான் அந்தவேலையினை ஆரம்பித்துவிட்டேன்.நான் கட்சிபேதம் பார்க்காமல் கள்வர் கூட்டத்திற்கு தண்டனை வழங்குவேன்.எனக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காக மட்டுமே நிகழ்ச்சி நிரலை வைத்துள்ளேன்.அதற்காகத்தான் அர்ப்பணித்துசெயற்படுகின்றேன்.அதற்கு என்னுடன் அனைவரும் கைகோர்க்கவேண்டும்.

அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து இதற்காக பயணிக்கவேண்டும்.இந்த நாட்டின் பிள்ளைகளுக்காக நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவோம்.கள்வர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் மோசடிகாரர்களையும் அரசியலில் இருந்து துடைத்துஎறிவோம்.

பெப்ரவரி 10ஆம் திகதிக்கு பின்னர் இந்தநாட்டில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவிருக்கின்றேன்.இந்த நாட்டில் கல்விமான்களும் புத்திஜீவிகளும் குறைவில்லாமல் உள்ளனர்,விஞ்ஞானிகளுக்கு குறைவில்லை,அனைத்து வளங்களும் இருக்கின்றது.

பல வளங்கள் இருந்தும் இந்த நாட்டினை முன்னேற்ற முடியாமல்போனதற்கு காரணம் கொள்ளையடிக்கும் மோசடி நபர்களைக்கொண்ட அரசியல்வாதிகள் இருப்பதாகும். பெப்ரவரி 10ஆம் திகதிக்கு பின்னர் இந்தநாட்டில் தேசிய இயக்கம் ஒன்றை ஆரம்பிப்போம்.தவறுசெய்பவர்களை துரத்தியடிக்கும் தேசிய இயக்கத்தினை நாங்கள் ஆரம்பிப்போம்.இதற்காக அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுகின்றேன்.

அனைவரும் ஒன்றிணைந்து மோசடிக்காரர்களை இல்லாமல்செய்வோம். கள்வர்களை விரட்டியடிப்போம். நாட்டை கட்டியெழுப்புவோம்.
No comments