Breaking News

ஐக்கிய தேசிய கட்சி தரகர்களுக்கு எங்களை விமர்சிக்க அருகதையில்லை –ஜனா காட்டம்

தமிழ் மக்களின் உரிமைக்காக சிறிய வயதில் புத்தக பையை                                      தூக்கியெறிந்துவிட்டு ஆயுதம் தூக்கி போராடிய எங்களை தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க அருகதையற்றவர்கள் என்று கூறுவதற்கு பெரும்பான்மை கட்சிகளுக்கு தரகர் வேலைபார்ப்பவர்களுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு ஓந்தாச்சிமடம் வட்டாரத்தில் போட்டியிடும் சோ.சற்குணத்தின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,இலங்கை தமிழரசுக்கட்சியி;;ன் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்;டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கை முழுவதுமே ஒரு புதிய அறிமுகமாக வட்டார முறையையும் விகிதாசார முறையையும் உள்ளடக்கிய கலப்பு முறைத் தேர்தலாக இத் தேர்தல் அமையவிருக்கின்றது. கடந்த காலங்களில் விகிதாசார முறையில் தேர்தல் நடைபெற்றபோது சில கிராமங்கள் அப்பிரதேசசபையிலே உறுப்பினர் இல்லாமல்     ஒதுக்கப்பட்ட காலம் இருந்தது.

ரணசிங்க பிரேமதாச அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தநேரம் கூடுதலான அதிகாரங்களை பிரதேசசபைகளுக்கு கொடுத்து கிட்டத்தட்ட சிறிய பாராளுமன்றம் போல பிரதேசசபைகளை உள்ளுர் அபிவிருத்திகள்,கிராமிய உட்கட்டமைப்புகள்,அதனோடு இணைந்த சிறுசிறு வேலைகளை தாமாக முடிவெடுத்து செய்யக்கூடிய அதிகாரத்தை அடிமட்டத்திற்கு கொடுத்திருந்தார்.  இந்த உள்ளுராட்சி சபைகள் கடந்த காலங்களில் உள்ளுர் அபிவிருத்திகளைத்தான் செய்துகொண்டிருந்தன. 
        
ஆனால் இந்த பிரதேசசபைத் தேர்தலானது தமிழ் மக்கள் மத்தியிலே அபவிருத்திக்கும் எங்களது எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கின்ற தேர்தலாகவும் நாங்கள் பார்க்கின்றோம்.     

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தவிர்ந்த ஏனைய கட்சிகளிலோ சுயேட்சைக் கட்சிகளிலோ போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்களும் அரசியல்வாதிகள் என்றும், இந்த தேர்தல் அரசியல் பேசும் களமல்ல,அபிவிருத்தி சம்பந்தமாக பேசும் களம் என்றும் தங்களது முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் சந்திகளிலும் நின்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் மத்தியில் வாக்கு கேட்டுவரும் இந்த நபர்கள் தற்கால அரசியலை அறியாதவர்களா? அல்லது அரசியல் அறிவிலிகளா? அல்லது அரசியலைப் பற்றி கதைக்காமல் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு அந்தப பிரதேசசபையின் நிதி ஒதுக்கீட்டில் கமிஷன் வாங்க துடிப்பவர்களா? என்று தான் நாங்கள் நோக்க வேண்டும்.                                               
                                                                                
நடந்துகொண்டிருக்கின்ற அரசியல் பேச்சுவார்த்தையில் பாராளுமன்றம் அரசியல் சாசனசபையாக மாறி தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு பல உபகுழுக்களையும் அதற்குரிய வழிநடத்தல் குழுவையும் உருவாக்கி செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  பலமிக்க சக்தியாக தமிழ் மக்களின் ஆணையை பெற்ற ஏகோபித்த பேரம்பேசும் சக்தியாக பேச்சுவார்த்தை மேசையில் பங்குபற்றதேவையிருக்கின்றது.

இலங்கையில் மொழிவுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழர்களை தொடர்ச்சியாக அடிமைகளாக வைத்திருக்க சிங்கள பேரினவாதம் செயற்பட்டதன் காரணமாக தமிழர்கள் அதற்கு எதிராக அகிம்சை ரீதியாகவும் ஆயுதம் ஏந்தியும் போராட்டங்களை நடாத்தினர்.இதன்மூலம் பல்வேறு இழப்புகளை சந்தித்தோம்.

வடகிழக்கு இணைந்த மாகாணத்தில் காணி,பொலிஸ் அதிகாரங்கள் கொண்ட எங்களை நாங்களே ஆளக்கூடிய சுயாட்சி ஒன்று உருவாக்கப்படுமானால் எமதுபொருளாதாரத்தினையும் ஏனையவற்றையும் பெற்றுக்கொண்டாலும் இழந்த உயிர்களைப்பெற்றுக்கொள்ளமுடியாது.

தந்தை செல்வா காலம் தொடக்கம் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை கட்சிகளினால் தமிழர்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு பின்னர் கிழித்தெறியப்பட்ட சம்பங்களும் நடைபெற்றுள்ளன.

எங்களை தொடர்ச்சியாக அடக்கியாண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் நடைபெற்றுவரும் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலவீனப்படுத்தவேண்டும் என்பதற்காக தங்களது அமைப்பாளர்கள் என்று கூறிக்கொள்ளும் முகவர்கள் ஊடாக கோடிக்கனக்காண பணத்தினைக்கொடுத்து தமிழ் மக்கள் மத்தியில் அந்த பணங்களை விதைத்து தமிழர்களின் வாக்குகளை பிரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறான பேரினவாத கட்சிகளுக்கு வாக்கு கேட்டுவரும் வேட்பாளர்கள் கூட கடந்த காலத்தில் இழப்புகளை சந்தித்தவர்களும் உள்ளனர்.எங்களது போராட்டங்களை மதிக்காமல்,கடந்த கால இழப்புகளை கருத்தில் கொள்ளாமல் பேரினவாத கட்சிகளுக்கு எமது மக்கள் மத்தியில் வாக்கு கேட்க வருகின்றார்கள் என்றால் இவர்களுக்கு சூடுசொரணை,மானம் ரோசம் இல்லையா?.இவர்கள் தமிழர்கள் இல்லையா என்பதை வீடுகளுக்கு வருவோரிடம் மக்கள் கேட்கவேண்டும்.

2015 ஜனவரி எட்டுக்கு முன்னர் இந்த நாட்டில் மகிந்தவில் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஒருவார்த்தைகூட கதைக்கமுடியாத நிலையிருந்தது.வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த சூழ்நிலையினை மாற்றி சுதந்திரமான நிலையினை ஏற்படுத்தி ஐக்கிய தேசிய கட்சிக்கும் வழங்கியுள்ளது.அச்சமில்லாது பேசுகின்ற சூழ்நிலையினை ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்ற செய்தியையும் அந்த தேர்தல் மூலம் நாங்கள் வழங்கியிருந்தோம்.பெரும்பான்மையில்லாத நிலையில் இருந்து தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டாட்சி நடக்கின்றது.மக்கள் விடுதலை முன்னணி கூட இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்த நாட்டில் மீண்டும் ஆயுதப்போராட்டம் ஒன்று ஏற்படக்கூடாது என்பதற்காகவே இரண்டு தேசிய கட்சிகளுடனும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணியை முன்னெடுத்துவருகின்றனர்.

வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் அனைத்து உள்ளுராட்சிமன்றங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் என்பது உறுதியான செய்தியாகும்.

மண்முனைத்தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் சில வேட்பாளர்கள் வட்டாரங்களுக்கு சென்று 1987,90ஆம்ஆண்டுகளில் இப்பகுதிகளில் இரத்தக்கறை படிந்தவர்களுக்கா வாக்களிக்கப்போகின்றீர்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் பேசியிருக்கின்றனர்.இவருக்கு கேட்பதற்கு தகுதியிருக்கின்றதா?.அவருக்கு அந்த அருகதையிருக்கின்றதா?.என்று கேட்கின்றேன்.

இந்த நாட்டில் 1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் முதன்முதலாக உருவாகியபோது அதற்கு எதிராக ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் பாதையாத்திரை சென்ற ஐக்கிய தேசிய கட்சியினர் இன்றுவந்து இதனை கதைக்கின்றனர்.அன்று அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்குமானால் அமுல்படுத்தப்பட்டிருக்குமானால் இந்தநாட்டில் இத்தனை அகிம்சை,ஆயுத,அரசியல் போராட்டங்கள் நடந்திருக்காது.

அதனைத்தொடர்ந்து 1978ஆம் ஆண்டு ஆட்சிக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி;ககு வந்த ஐக்கிய தேசிய கட்சியானது கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.1983ஆம்ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தமிழ் மூத்த தலைவர்களை படுகொலைசெய்தனர். குட்டிமணியின் கண்களை தோண்டி காலால் மிதித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு கேட்டுவரும் கண்ணன் என்பவர் 19வயதில் தமிழ் சமூகத்திற்காக புத்தகப்பையினை தூக்கியெறிந்து துப்பாக்கி தூக்கிய என்னை வாக்கு கேட்கவருகின்றார் என்று கூறுவதற்கு என்ன அருகதையிருக்கின்றது.

நாங்கள் இயக்கங்கள் அண்ணன் தம்பிகள்.ஒரு வீட்டுக்குள் ஐந்து பேர் இருந்தால் பிரச்சினைகள் வரும்,குழப்பங்கள் வரும்,சண்டைகள் வரும்.ஒருநாள் அந்த வீட்டில் நல்லதுகெட்டது நடக்கும்போது அனைவரும் சந்திப்போம் ஒன்றுபிட்டு பிறகுநடப்போம்.

எங்களுக்குள் பிரச்சினையிருந்தது 2001இல் கடந்த கால கசப்புகளை மறப்போம் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று தலைவர் பிரபாகரன் விடுத்த அழைப்பின் பேரில் ஒன்றாக இணைந்து உருவாக்கியதே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.

2004ஆம்ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான நரிக்குணம் கொண்ட ரணில் விக்ரமசிங்க அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினை இரண்டாக பிரித்து அதில் இருந்து பிரிந்த ஒரு சாராரை வைத்து மிகுதிப்பேரை அழித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு பிச்சை கேட்டுவரும் உனக்கு விசேட அதிரடிப்படையினருடன் மோதி வயிற்றில் இரண்டு குண்டுகளுடனும் காலில் ஒரு குண்டுடனும் தாங்கி நிற்கும் என்னை வாக்கு கேட்க கூடாது என்று கூறுவதற்கு என்ன அருகதையிருக்கின்றது.

பழக்கடையினை வைத்துக்கொண்டு மாற்று இன பிரதியமைச்சருக்கு இணைப்பாளராக இருந்துகொண்டு எமது இனத்தினை காட்டிக்கொடுத்தவர்கள், எமது இனத்தின் காணிகளை அபகரிப்பவர்கள்,காளிகோவிலை அழித்து மீன்சந்தை கட்டினவர்களுக்கு இணைப்பாளர்களாக இருந்துகொண்டு தரகுப்பணத்திற்காக காசுவாங்கி தொழில்பெற்றுக்கொடுக்கும் உங்களுக்கு விடுதலைக்காக போராடிய எங்களை பார்த்து விரல் நீட்டுவதற்கு என்ன தகுதியிருக்கின்றது.

ஜனநாயக போராளிகள் கட்சி இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இருக்கின்றது.ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடுகின்றது.தமிழ் மக்களுக்கான அரசியல் ரீதியான போராட்டங்களுக்காக ஜனநாயக போராளிகள் கட்சி எங்களுடன் கைகோர்த்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.நிராகரிக்கப்படவேண்டிய கட்சிகள் பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சி முதல்வரிசையில் சேரும்.பட்டிருப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இல்லாமலாக்கிய பெருமையும் ஐக்கிய தேசிய கட்சியையே சாரும்.No comments