டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தினை அம்கோர் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

(லியோன்)


 மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவகத்துடன் இணைந்து அம்கோர் நிறுவனம் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தினை மாவட்ட ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது
 

இத்திட்டதினூடாக நுளம்பினை கட்டுப்படுத்தல் ,நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை ஊக்குவித்தல் என்பன முன்னெடுக்கப்படுகின்றன.

இச்செயற்றிட்டமானது மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட பிரதேச செயலக பிரிவுகளான மண்முனை வடக்கு , ஆரையம்பதி மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

நுளம்பு பெருகும் இனம்காணப்பட்ட இடங்களை குறிப்பாக வீடுகளிலுள்ள பாவணையற்ற கிணறுகளில் நுளம்பு பெருகுதலை கட்டுப்படுத்துவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வலை மூடியானது வழங்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி , மண்முனை வடக்கு மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்;9000 குடும்பங்களிற்கு இவ்வலை மூடியானது வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் கீழ் அம்கோர் நிறுவன உத்தியோத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக  உத்தியோகத்தர்களுடன் இணைந்து மட்டக்களப்பு பாலமீன்மடு கிராம சேவையாளர்  பிரிவில் கிணற்றுக்கான  வலைமூடிகள் வழங்கி வைக்கப்பட்டது

இதனுடன் இணைந்ததாக நுளம்பினை கட்டுப்படுத்தல்  செயற்பாடுகளை  முன்னெடுப்பதற்காக நுளம்புக்கான புகை விசிறி கருவிகள், பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் ஒலிபெருக்கி கருவிகள் போன்ற உபகரணங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் அம்கோர் நிறுவனத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு மா. உதயகுமார் தலைமையில் இன்று  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.