Breaking News

மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களில் சிறுவர்களின் கவலைக்கிடமான போஷாக்கு மட்டம்.

இன்று தேசத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஆரோக்கியமான குழந்தைகள் என்பது சிறந்த அத்திவாரமாக அமைகின்றது. குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் இடம்பெறும் வளர்ச்சி என பொருள்படும்.அமெரிக்க கல்வி அறிஞரான ஜோன் டூயி (1859 – 1952 ) 'பிள்ளைகளுக்குரிய சூழலையும் அங்கு வாழ்வதற்கு உதவும் அனுபவங்களையும் பெற்றுக் கொடுத்தல் கல்வியாகும் என்றார்';. கடந்த யுத்த அனர்த்தம், வறுமை, வேலையின்மை போன்றவற்றினால் எமது மாவட்டத்தின் எல்லைக் கிராமத்து குடும்பங்களின் வாழ்க்கைச்சுமை அதிகரித்து அந்தச் சூழ்நிலை இல்லாது போனமை யாவரும் அறிந்ததே. அவ்வாறான நிலையில் ஊட்டச் சத்துள்ள உணவினை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வழங்கி அவர்களை வளர்க்கும் நிலையில் இல்லாது உள்ள மாதிரி பாடசாலை ஒன்றினை தெரிவு செய்து கிழக்கிலங்கை இந்து சமய மற்றும் சமுக அமைப்பினரால் (கி......) நிக் அன்ட் நெல்லி அமைப்பின் நிதியுதவியில் 'போஷாக்கு உணவு வழங்கும் திட்ட நிறைவு' மற்றும் பாராட்டு வழங்கும் நிகழ்வு 30.12.2017 அன்று சுரவணையடி ஊற்று விநாயகர் பாலர் பாடசாலையில் கி...... இன் தலைவர் .துஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இராகுலநாயகி, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வே.குணசேகரம், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க தலைவர் ரி.வசந்தராசா, தேசியக்கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கேதீஸ்வரக் குருக்கள், ஆசிரியர் வே.குகதாசன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர்.


அத்துடன் இந்நிகழ்வை சிறப்பிக்க கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், ஆலய நிர்வாகத் தலைவர்கள், சங்கங்கங்கள் கழகங்களின் தலைவர்கள் உட்பட பிள்ளைகளின் பெற்றோரும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சி.தணிகசீலன்,'அண்மைக்காலங்களில் இலங்கை குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தியை எய்தியிருந்த போதிலும் சிறுவர் போசாக்கு என்பது பெருமளவு வளர்ச்சி காணவில்லை. அதிலும் எமது பிரதேசங்களில் அவை மோசமாக் காணப்படுகின்றது. இந்நிலையில் இருந்து எமது மக்ககளை சிறிது சிறிதாக மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும். ஒன்றுபட்டால் இந்த தடைகள் எல்லாம் எமக்கு வெறும் தூசிகளே. இந்த நிகழ்வானது ஒரு மாதிரி நிகழ்வாக எம்மால் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான நிகழ்வாகும். குழந்தைகளின் நிறை முன்னேற்ற அறிக்கையானது அதற்கு சான்று பகர்கின்றது. இது போன்ற செயற்பாடுகளை எமது நிலைப்பாட்டை உணர்ந்த ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் செல்ல மனங்கொள்ளவேண்டும். அப்போது கல்வியில் ஏழ்மை என்கின்ற சொல்லை எமது சமுகத்திடையே கழைந்தெறியலாம்' என கருத்துரைத்தார்.


பிரதேச செயலாலர் கூறுகையில் 'எதிர்காலத்தில் இவ்வாறான நுட்பமான அபிவிருத்திகளை கூட்டிணைந்து செயற்படுத்த தயாரக உள்ளேன். ஏனெனில் இவ்வாறான மகத்தான செயற்திட்டங்கள், கண்ணுக்கு தெரிகின்ற கட்டிடங்கள் போன்ற அபிவிருத்திகளை விட இவ்வாறான மனிதவள அபிவிருத்தி முக்கியமானவை. இவற்றை பாடசாலையில் மாத்திரமல்ல வீடுகளிலும் இயலுமானவரை பெற்றோர்கள் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். இந்த மாதிரியான நல்ல செயற்பாடுகளை தமிழர் வாழுகின்ற இடங்களில் செயற்படுத்திவருகின்ற கி...... இனருக்கும் மற்றும் நிக் அன்ட் நெல்லியினருக்கும் எமது மக்களின் சார்பில் நன்றியினை தெரிவிப்பதோடு. அவர்களை இங்கு பாராட்டிவைக்கவும் விரும்புகின்றேன்' எனக் கூறினார்.


சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வே.குணசேகரம் கருத்து தெரிவிக்கையில் ' குழங்தையின் அறிவு வளர்ச்சியில் இந்த பாலர் பருவம் மிகவும் முக்கியமானது. குழந்தை வளர வளர, நம் முயற்சி எதுவுமில்லாமலேயே அதன் மூளையும் தன்னிச்சையாக வளர்ந்து விடுவதில்லை.மாறாக, அந்தக் குழந்தையின் மூளை பெறும் அனுபவங்களையும், பயிற்சியையும் பொறுத்தே அது சிறந்ததாக வளர்கிறது. இதற்குஅவர்களுக்கு வழங்கும் சத்துணவுகள் அவர்களது உடல் உள வளர்ச்சியில் நேரடி பங்கினை வகிக்கின்றது. ஆகவே இவ்வாறான திட்டம் எமது பல பகுதிகளில் முன்னெடுக்கவேண்டும். அப்போதுதான் வயதுக்கு ஏற்ப நிறையை அடைந்து கொள்ளுவதனை சாத்தியமாக்கிக் கொள்ளலாம்' எனவும் ' இந்த செயற்திட்டத்தின் மூலம் நல்ல போஷாக்கான உணவு நடைமுறைள், சுகாதாரப் பழக்கவழக்கங்கள் என்பனபோன்ற விழிப்புணர்வு பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடையே விழிப்பூட்டப்பட்டுள்ளன' எனவும் அவர் தெரிவித்தார்.

ர்p.வசந்தராசா அவர்கள் தெரிவிக்கையில் 'ஒரு குழந்தையை சிறுவயதில் இருந்து நாங்கள் ஏற்படுத்துகின்ற பழக்க வழக்கங்கள்தான் அவர்களை பெரியவர்களாகியும் பின்தொடர வைக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல். இவர்களுக்கு நல்ல உணவுப் பழக்கத்தினை பாலர் பாடசாலை மட்டத்தில் இருந்து ஏற்ப்படுத்த எடுத்திருக்கும் முயற்சி எமது குழந்தைகளின் எதிர்காலத்தினை வண்ணமயமாக்கும் ஒரு அத்திவாரம். ஆதற்கு இந்தச் சபையினர் செய்து வரும் ஒவ்வொரு செயற்பாடும் அந்தச் சமுகத்தில் விடுபட்டவை, அவற்றை தெரிவு செய்து நல்ல செயற்பாடுகளை செய்துவருவதனை பாராட்டாமல் இருக்கமுடியாது' எனவும் கூறினார்.

மாவட்ட இந்துக் கலாசார உத்தியோகத்தர் கருத்துத் தெரிவிக்கையில் 'தமிழர்களின் சமயம், தமிழ் சார்ந்த செயற்பாடுகள் குறைந்துவருகின்ற இந்த நேரத்தில் இவர்களது காலம் அறிந்த சேவைகளில் நானும் கலந்துகொண்டவன் என்ற வகையில் அவற்றைப் பாராட்டுவதுடன் அவற்றை தொடர்ந்து செம்மையாகக் கொண்டு நடாத்த அவர்களைப் பாராட்டுகின்றேன்' என்றார்.

இத்துடன் அங்கு இந்தப் பாடசாலையை நல்ல முறையில் வழிநடாத்திச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் கழகத்தலைவர்கள் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் சபையின் செயலாளர் .கலாவதியின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.


No comments