எங்களை விட அபிவிருத்தி செய்ததை நிரூபித்தால் பதவி விலகுவேன் -சாவால் விடும் எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த அபிவிருத்திகளை விட வேறு எந்த கட்சியாவது இந்த மாவட்டத்தில் அதிகபடியான அபிவிருத்தி செய்துள்ளது என்று யாராவது நிரூபித்தால் நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார்.

கடந்த இரண்டரை வருடகாலத்தில் இந்த மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்ப மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை(02-01-2018)தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவலும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும ;முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,குழுக்களின் பிரதிதலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்,
பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மிகப் பலமான நிலையில் களமிற்கியிருக்கின்றது என்பதில் எந்தவித ஐயப்பாடுகளும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை நாங்கள் முக்கியமான இரண்டு கேள்விகளைப்பற்றி சிந்தித்து அதற்கூடாக செல்லாம் என நினைக்கின்றேன். ஒன்று எத்ததைய சூழலில் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றோம், இரண்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கின்ற முக்கியமான இரண்டு பெரிய சவால்கள் அல்லது விமர்சனங்களுக்கு எவ்வாறு நாம் முகங்கொடுக்கப்போகின்றோம் என்பதாகும்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இருக்கின்ற ஒவ்வொரு கட்சிகளும் மற்றைய ஒவ்வொரு கட்சிகளைப்பற்றி விமர்சிக்கின்றன. இந்த சூழலில் வடக்கு கிழக்கை பொறுத்தளவில் ஒரு ஒற்றுமை இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் களமிறங்கியிருக்கின்ற அனைத்து கட்சிகளும் கூட்டாக இணைந்து தங்களுடைய முழுமையான விமர்சனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மேல் மாத்திரம் செய்துகொண்டிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பதோ அல்லது ஐக்கிய தேசியக கட்சி ஸ்ரீல்கா சுதந்திரக் கட்சியை விமர்சிப்பதோ  அல்லது ஒரு சுயேட்சைக் குழு இன்னொரு சுயேட்சைக் குழுவை விமர்சிப்பதோ அல்லாமல் ஒட்டுமொத்த கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து வருகின்றன. இப்படியானதொரு சூழலில் தான் நர்கள் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றோம்.

எவ்வாறான விமர்சனங்களும் விசமத்தனங்களும் மாற்றுக் கருத்துக்களும் தமிழ்த தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வந்தாலும் மக்களோடு நாங்கள் இருக்கின்றோம் அதற்கும் மேலாக மக்கள் எங்களோடு இருக்கின்றார்கள் என்ற திடமான நம்பிக்கையும் கடந்தகால தேர்தல்களில் நாங்கள் பெற்ற வெற்றியும் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாங்கள் நூறுவீத வெற்றியை பெறுவோம் என்பதை  எந்தவித ஐயப்பாடுகளுமில்லாமல் உறுதி செய்கின்றது.

இதேபோன்ற நூறுவீத விமர்சனங்களையும் விசமத்தனங்களையும் கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது வடக்கு கிழக்கில் தோல்வியடைந்த அதே கட்சியை சார்ந்தவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதேபோன்று செயற்பட்டவர்கள் இப்போது உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் அதே நிலைப்பாட்டில் களமிறங்கியிருக்கின்றார்கள்.

எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைக்கப்படுகின்ற இரண்டு முக்கிய சவால்கள் இருக்கின்றன. இப்பொழுது வேட்புமனு தாக்கல் முடிந்து ஒவ்வொரு வட்டாரமாக களமிறங்கி கடமைகளை செய்துகொண்டிருக்கின்றீர்கள். இந்த தருணத்தில் இரண்டு விதமான எதிர் பிரசாரத்திற்கு  நீங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தி விடயத்தில் உதவாத கட்சி,அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையான கட்சி,இவர்கள் கடந்த கால்களில் அபிவிருத்தியே செய்யவில்லை, உரிமை உரிமையென வெறுமனே பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் என்ற பலமானதொரு விமர்சனம் ஏனைய கட்சிகளை சார்ந்தவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

இதில் உள்ள உண்மை என்ன, ஜனநாயகம் என்ன என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தீர்வுத்திட்டம் நோக்கிய பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களை அடகுவைத்து விட்டது, எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சி போன்று செயற்படுகின்றது, இடைக்கால அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டுவிட்டது என்ற இன்னொரு வகையான பிரசாரத்தையும் நாங்கள் களத்தில் சந்திக்கின்றோம்.

இந்த இரண்டு வகையான எதிர்ப்பிரசாரங்கள் சவால்களின்றி முறியடிக்கப்படும். நாங்கள் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின் பங்காளர்களாக இரண்டரை வருடங்கள் இருந்திருக்கின்றோம். அதேவேளை அதேவேளை ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு சுதந்திரமானதொரு சூழலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கின்றோம்.
தேசிய ஆட்சியில் இரண்டு வருடத்தையும் மாகாண ஆட்சியில் இரண்டு வருடத்தையும் நிறைவு செய்திருக்கின்றோம். இந்த இரண்டுவருட காலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பிரதேசங்களில் செய்த அபிவிருத்திகளை ஒவ்வொரு வேட்பாளரும் அறிந்துகொள்ள வேண்டும்.

நான் சவாலுக்கு சொல்லமுடியும்.நாங்கள் களமிறங்கி வேலைசெய்யும் கிராமங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த வேலைத்திட்டங்களை விட, அபிவிருத்தியை விட ஒரு படி ஏனைய கட்சிகள் செய்திருப்பதை நிரூபித்தால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு தயாராகவிருக்கின்றேன்.

நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் நடாத்திய வேலைத்திட்டங்களை பட்டியல்படுத்தவேண்டும்.அந்தவேலைத்திட்டங்களை அனைவரும் அறிந்திருக்கவேண்டும்.ஐயன்கேணி பகுதியில் கடந்த இரண்டரை வருடத்திற்குள் நான்கரை கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

வீதிகளை போட்டோம்,கட்டிடங்களை கட்டினோம்,பாலங்களை கட்டினோம் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேட்கின்றனர்.மகிந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் வீதிகளும் கட்டிடங்களும் கட்டப்படவில்லை.நாடு”ராகவும் கட்டப்பட்டது.ஆனால் இங்கிருந்தவர்கள் யாரோ பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தார்கள்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகளை சரியாமுறையில் அறிந்து அபிவிருத்தி சார்ந்த விடயங்களை செய்துகொண்டிருக்கின்றது.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன அபிவிருத்தியை செய்தது என்ற பிரச்சாரமே மாற்று கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து நாங்கள் செய்த அபிவிருத்திகளை கடந்த ஆட்சிக்காலத்தில் இவர்கள் மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்து செய்யவில்லை.

தீர்வுத்திட்ட விடயத்தில் இன்னுமொரு பிரிவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.சில கட்சிகள் அபிவிருத்திகளை வைத்து தாக்குகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்த கிரான்பாலம்,சந்திவெளி பாலம்,குருக்களமடம் பாலம் என எத்தனையோ பாலங்களை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்.

இன்னுமொரு பிரிவினர் இடைக்கால அறிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுவிட்டதாக பிரசாரம் செய்கின்றனர்.இடைக்கால அறிக்கையில் சேர்க்கப்படவேண்டிய பல விடயங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம்.இடைக்கான அறிக்கையினை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டோம் என்று போலியான பிரச்சாரங்களை தற்போது மேற்கொண்டுவருகின்றனர். இதுமுற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயங்கள்.

தீர்வு விடயம் தொடர்பில் பேசுகின்ற மாற்றுத்தலைமைகள் இதனை தூக்கியெறிந்தால் அடுத்ததான மாற்றுவழியென்ன என்பது தொடர்பான திட்டம் அவர்களிடம் இல்லை.

நாங்கள் பல இழப்புகளையும் வேதனைகளையும் சந்தித்திருக்கின்றோம்.உரிமைக்காக பெருமளவானவற்றை இழந்திருக்கின்றோம்.ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான குடும்பத்தினை தலைமை தாங்கும் தாய்மார்களையும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளையும் நாங்கள் தாங்க நிற்கின்றோம்.இலட்சக்கணக்கான தாய்தந்தையர்களை இழந்த சிறுவர்களை நாங்கள் தாங்கிநிற்கின்றோம்.இந்த நிலையில் எமது மக்களின் நியாயமான உரிமைக்காக சிறிதும் பிசகாமல் நாங்கள் பயணித்துக்கொண்டீருக்கின்றோம்.

தற்போது தமிழ் மக்களின் காணிகளையும் தமிழ் மக்களையும் பாதுகாக்கப்போவதாக பேசுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆட்சிக்காலத்தின் அரசாங்கத்தில் இருந்துகொண்டு சில அதிகாரிகளையும் கையில் வைத்துக்கொண்டு மாற்று இனத்திற்கும் தென்னிலங்கையில் இருந்துவந்தவர்களுக்கும் அபிவிருத்தி என்ற போர்வையில் எத்தனையாயிரம் காணிகளை விற்று பிழைத்துள்ளனர்.

புத்தி ஜீவிகளை சுட்டுக்கொன்றீர்கள்,கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதன் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்துவந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத்தை கடத்திச்சென்றீர்கள்.புத்திஜீவிகளுடன் நின்றுவிடாது ஊடகவியலாளர்களையும் சுட்டுக்கொன்றீர்கள்.அரசியல் தலைவர்களை சுட்டுக்கொன்றீர்கள்.பாடசாலை மாணவர்களை கடத்தினீர்கள்,பல்கலைக்கழக மாணவர்களை கடத்தினார்கள்,இப்போது ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சூழலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை சில வட்டாரங்களில் களமிறங்கி செயற்படமுடியாதவாறு அச்சுறுத்தல் விடுத்தீர்கள்.

இவ்வாறானவர்கள் மீண்டும் இந்த சமூகத்தின் தலைவர்களாக,இந்த மண்ணின் தலைவர்களாக வருவார்களானால் பழைய நிலைக்கு நாங்கள் செல்லவேண்டிய நிலையேற்படும்.2008ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் களமிறங்கவில்லை.கடந்த தடைவ அனைத்து உள்ளுராட்சிசபைகளையும் வைத்திருந்தவர்கள் இன்று கிராமங்களில் வீதி போடப்படவில்லையென பேசுகின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்று பேசுகின்றனர்.