சமுகத்தில் வயோதிபர்கள் மற்றும் சிறுவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள்.


ஒரு முழுமையான தேகாரோக்கியமான மனிதசமூகத்துக்கே வாழ்க்கை ஒரு சவாலாக இருக்கும் போது யுத்தம், இயற்கை போன்ற இன்னோரன்ன அனர்த்தங்கள் காரணமாக விசேட தேவையுடையவர்களாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களின் நிலையினை சற்று சிந்திக்கவேண்டும். எமது மாவட்டத்தின் 2015ம் ஆண்டின் ஆண்டறிக்பகை படி எல்லாவகையிலும் விசேட தேவையுடையவர்களென சுமார் 6879 பேர்வரை அடையாளங்காணப்பட்டுள்ளனர். பலர் பாடசாலை செல்லும் வயதில் உள்ளவர்கள் சிலர் வயோதிப நிலையை அடைந்தவர்கள் இந்த இரு வகுதியினரும் சமூகத்தில் முன்னிலைப்படுத்தவேண்டியவர்கள்.வர்களில் சிலர் வறுமையின் உச்சகட்டத்தில் இருந்தாலும் எப்படியோ தாங்களும் சமூகத்தில் வாழவேண்டும் என ஆசை கொண்டவர்கள்.

ஓக்டோவர் முதலாம் திகதி உலக முதியோர் மற்றும் சிறுவர் தினத்தினை முன்னிட்டு கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினால் முன்னெடுக்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வுடன் கூடிய கொண்டாட்டம் மண்டுர் கிராமத்தில் அங்குள்ள மன்றங்கள் சங்கங்கள் ஆகியவற்றின் ஒத்துளைப்புடன் இனிதே நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளரும் பொறியியலாளருமான ந.சிவலிங்கம், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சில் இணைந்து பணியாற்றும் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் கட்டிடங்கள் திணைக்களத்தில் களப் பொறியியலாளராகப் பணியாற்றும் செல்வி.கலைச்செல்வி மட்டக்களப்பு விவேகானந்த கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் .பிரதீபன் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையின் தலைவர்.த.துஷ்யந்தன்; கிராமத்து சங்கங்கள் களகங்களின் உறுப்பினர்கள், முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறிப்பாகவயது நிறைந்த முதியோர் மற்றும் சிறுவ்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கௌரவத்தினை ஆறுதலை இந்த நாளில் முழுமையாக வழங்கி கொண்டாடுவதன் மூலம் அவர்களது உரிமைகளை வென்று தரும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை செய்துவரும் கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி மன்றத்தினர்,பெறுமதிவிக்க பொருட்கள் பலவற்றினை வழங்கி, மாலை அணிவித்து அவர்களை கௌரவித்து பாராட்டியமை ஒரு குறிப்பிடத்தக்க சமுக சேவையாகவும், விழிப்புணர்வு நிகழ்வாகவும் கொள்ளப்படுகின்றது.
இங்கு தலைமை உரை நிகழ்த்திய சபையின் தலைவர் கருத்து தெரிவக்கையில் ' எமது சபை மதம், மொழி சார்ந்த சேவைகளுக்கு அப்பால் பல சமுகப்பணிகளை சமுகத்தின் மேலதிகாரிகளை இணைத்துக்கொண்டு மக்களுடன் சேர்ந்து பல பணிகளை செய்து வருகின்றது அந்த வகையில் இந்த நாளில் இவர்களை கௌரவிக்க எண்ணி தெரிவு செய்யப்பட்ட இருவகுதியினருக்கும் நிக் அன்ட் நெல்லி பௌண்டேசன் அமைப்பின் அணுசரணையில் இந்நிகழ்வு ஒழுங்கு படுத்தி இந்தப்பிரதேசத்திலே முதன் முதலில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது இம்மக்களிடையே பாரிய விழிப்புணர்வினை தூண்டியுள்ளது' எனக் கூறினார்.

தொடர்ந்து அதிதியாக அழைக்கப்பட்ட உதவி ஆணையாளரும் பொறியியலாளருமான திரு.ந.சிவலிங்கம் தெரிவிக்கையில் 'ஆசியாவில், இலங்கை முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் பல சவாலினை எதிர்கொள்ளும் முக்கிய ஒரு நாடாக இனங்காணப்பட்டுள்ளது, இலங்கையில் இப்பொழுதும், இனிவரும் காலங்களிலும் இவர்களுக்கான 'குறைந்தளவான சமுகப் பாதுகாப்பு', அதைத் தொடர்ந்தான 'குறைந்து வரும் பாரம்பரியமான பராமரிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை', என்பன இவர்களை வறுமையான நிலைக்கு ஆளாக்கி, அவர்களை வயோதிப நிலையிலும் வேலை செய்யும் ஒரு பொறிக்குள் தள்ளியுள்ளது. அல்லாதவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுசேர்க்கும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்கள் வயோதிபம் காரணமாக அன்றி, அவர்களது மிக மோசமான சுகாதார நிலைமை காரணமாக மாத்திரமே வேலையை விட்டு ஓய்வு நிலைக்கு செல்லுகின்ற ஒரு நிலமை காணப்படுகின்றது. இருப்பினும் எமது கிராமப்புறங்களில் அவ்வாறு அவர்களை கைவிட்டு பராமரிக்காத பரிதாப நிலை மிக அரிதாகவே இடம் பெறுகின்றது. அதனை நினைத்து பெருமைப்படுவதுடன் இவ்வாறான நிலை தொடர்ந்து இடம்பெறும் நிலையினை வலியுறுத்தNவு இத்தினத்தினை இந்த இடத்தில் நடாத்தி வருவது பெருமைக்குரியதே' என அவர் கூறினார்.

உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் கருத்து தெரிவிக்கையில் 'ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் உறுப்புரிமை 6க்கு அமைய 18 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளும் உயிர்வாழும் உரிமையுடையவர்கள். கருத்துச் சுதந்திரம், கூடும் சுதந்திரம், அந்தரங்கத்தைப் பேணல், பொருத்தமான தகவல்களைப் பெறல், இம்சை மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறல், கல்வி கற்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் சிறுவர்களுக்கும் உள்ளது என்ற ஐக்கிய நாடுகளின் சாசனத்தை, இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.இந்த உரிமைகள் அனைத்தும் வயது, பால், இனம், நிறம், சாதி, மொழி மற்றும் மத வேறுபாடுகளின்றி வழங்கப்பட வேண்டும். சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதுடன் அவர்களின் உரிமைகளைப் பரப்புவதற்கு அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.'
எனவும் 'எமது மக்கள் மத்தியில் உள்ள முதியோர்கள் எமது சொத்துக்கள், அவர்கள் கௌரவப்படுத்தப்பட வேண்டியவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் பல தசாப்த கால அனுபவ சாலிகள். ஆவர்களிடம் நாம் பல அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் கொள்ளளவு கொண்டவர்கள்.இலங்கையைப் பொறுத்தவரையில் முறைசார் துறைகளில் தொழில் புரிந்து ஓய்வுபெற்றவர்கள் குறிப்பிட்ட அளவு ஓய்வூய்திய மற்றும் குறைந்தளவான வசதிகளை பெற்றாலும் அவர்கள் பணரீதியில் வசதிகுறைந்தவர்களாகவே இருக்கின்றனர். இதனால்தான் இலங்கை தெற்காசிய நாடுகளுக்குள் முதியோர்களின் நலன்புரி விடயங்களில் கருசனைகொள்ளுகின்ற சமுகப் பாதுகாப்புக் கொடுக்கும் நாடுகளுள் முன்னணியில் இருக்கின்றது. இருப்பினும் இவர்களுக்கு எந்தவிதத்திலும் நிறைவான ஒரு திட்டத்தினை அமைத்துக்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். மொத்த வயோதிபர்களில் வெறும் ஐந்தில் ஒரு பகுதியினரே ஓய்வுதியம் பெறுவதாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே ஓய்வூதியத்திட்டத்தில் மொத்த ஊழியப்படையில் இணைந்துகொள்ளும் சந்தர்ப்பத்தினை பெறுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது, அதிலும் முறைசாரா துறைகளில் வேலைபுரியும் அதிகமானோர் இந்த திட்டத்துக்குள் இணைக்கப்படுவதில்லை என்பதும் தகவல் கூறும் உண்மையாக இருக்கின்றது' எனவும் கூறினார்.

இதில் கலந்துகொண்ட ஒரு முதியவர் கருத்துத் தெரிவிக்கையில் ' இச்சபையானது எமக்கு தந்த கௌரவம் சிறிதாக இருப்பினும் அதனை பெரிதாகவே நினைக்கிறோம், இதன் மூலம் எமது முக்கியத்துவத்தினை எமக்கே எடுத்துணர்த்தி இருக்கின்றனர். பல வேலைப்பழுவுக்கும் மத்தியில் இந்த அதிகாரிகள் எமது சிறிய கிராமத்துக்கு தொலைவில் இருந்து வருகைதந்து இப்பணியினை செய்தமைக்கு எல்லாம் வல்ல மண்டூர் கந்தனின் நல்லாசியும் எமது பாராட்டுக்களும் என்றும் இருக்கும்' என பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.