மாடு நித்திரை தூங்கியதனால் கொண்டுசெல்ல தாமதமாகியதாக தெரிவித்த பொலிஸார் -விசாரணைக்கு பணிப்பு

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளரினால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் நித்திரை தூங்கியதினால் மூன்று மணி நேரத்திற்கு பின்னரே பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது தொடர்பில் விசாரணை செய்யுமாறு பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கான பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை (28)அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் அமீர்அலி,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்.பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில்  மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள், குடிநீர்,சுகாதாரம்,பிரதேசசபைகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

தம்மால் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்போது தம்மை பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்து முறைப்பாட்டினை பதிவுசெய்யுமாறு கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் கோரப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் தெரிவித்தார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து மண்,மாடு,ஆடுகள்  சட்ட  விரோதமான முறையில் கொண்டுசெல்லப்படுவதாகவும் அது தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசென்றால் தன்னை வந்து பொலிஸ்நிலையத்தில் முறைப்பாட்டை  பதிவுசெய்யுமாறு கோhரப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறானால் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்,பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்குஅறிவிப்பது என்றால் பொலிஸ் நிலையம் சென்றா முறைப்பாட்டினை பதிவுசெய்வார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதேநேரம் அண்மையில் மண்முனை பாலம் ஊடாக எட்டுமாடுகளை சட்ட விரோதமான முறையில்கொண்டுசெல்லமுற்பட்டபோது பிரதேச செயலாளரினால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான முறைப்பாடை பிரதேச செயலாளரை பொலிஸ்நிலையம் வந்து பதிவுசெய்யுமாறு பொலிஸாரினால் கோரப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் அப்பகுதி கிராம சேவையாளரை பொலிஸ்நிலையத்திற்குஅனுப்பியுள்ளார்.

குறித்த பகுதியில் மாலை 06.00மணிக்கு மாடுகளை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டு கிராம சேவையாளர் கொக்கட்டிச்சோலை பொலிஸ்  நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அவர் பொலிஸ் நிலையம் சென்று நீண்ட நேரம்  காத்திருந்தவேளையில் இரவு 9.00மணிக்கு பின்னரே பொலிஸ் நிலையத்திற்கு மாடுகளை பொலிஸார் கொண்டுவந்ததாகவும் மாடுகளை கொண்டுவரும்போது மாடுகள் நித்திரை தூங்கிவிட்டதாக தன்னிடம் கூறப்பட்டதாகவும் கிராம சேவையாளர் இங்கு தெரிவித்தார்.

அதிகாரிகளிடம் இவ்வாறு செயற்படுவது தொடர்பில் கடுமையான கண்டனத்தினை தெரிவித்த பிரதியமைச்சர் அமீர்அலி அது தொடர்பில்விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.