மட்டக்களப்பில் தொடரும் குப்பை பிரச்சினை -இன்றும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாத காரணத்தினால் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதனால் அவற்றினை தடுக்கும் வகையில் மாற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடையில் மகளிர் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை கல்லடி,உப்போடையில் உள்ள பொதுச்சுகாதார பரிசோதகரின் அலுவலகத்திற்கு முன்பாக நடாத்தினர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கழிவுகள் அகற்றப்படாத காரணத்தினால் பாரிய சுகாதார பிரச்சினையேற்பட்டுள்ளதாகவும் இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் பாதிக்கப்படுவதாகவும் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டுப்பட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் அதற்கான மாற்று நடவடிக்கைகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதுவரையில் மேற்கொள்ளவில்லையெனவும் இங்கு மகளிர் அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும் தற்போது மழை காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் குப்பைகள் அகற்றப்படாவிட்டால் பாரிய சுகாதார பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்நோக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக அதன் வழியாக பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு மாற்று இடங்களை பெறமுடியாத நிலையிருந்துவருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

இதன்காரணமாக நீதிமன்றில் தற்காலிக தடையுத்தரவு நீங்கும் வரையில் வீடுகளில் சேரும் கழிவுகளை நீங்களே முகாமை செய்துகொள்ளுங்கள் என மாநகரசபையினால் அறிவிக்கப்பட்டிருந்தது.அதற்கு வரவேற்பு கிடைத்ததுடன் பலர் அதனை மேற்கொண்டனர்.ஆனால் சிலர் கழிவுகளை கண்டகண்ட இடங்களில் வீசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை மாநகரசபை சேகரிக்கும் வரையில் குறித்த பகுதி மக்களே முகாமைத்துவம் செய்துகொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.