மட்டக்களப்பில் இருந்து செல்லும் பஸ்கள் திடீர் சோதனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பினை ஊடறுத்தும் பயணங்களை மேற்கொள்ளும் பஸ்வண்டிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டபோது 12பஸ்வண்டிகளுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் உருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபைக்கு தூர சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடையடுத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் று.ஆ.ர்.உதயகுமார தலமையில் 11.09.2017 இரவு 09.00 தொடக்கம் 12.09.2017 அதிகாலை 05.00 மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகார சபை பரிசோதனைக்குழுவினர் அம்பாரை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர்களுடன் பொலிஸாருமிணைந்து மட்டக்களப்பிலிருந்து தூர சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகள் மற்றும் மட்டக்களப்பினூடாக ஊடறுத்துச்செல்லும் 27 பஸ்வண்டிகளை தீவிர ஆய்வுக்குற்படுத்தினர்.

உரிய வழித்தடத்தில் செல்லாமை, பயணிகளிடமிருந்து கூடுதலான பண அறவீடு, சாரதி, நடத்துனர்களுக்கான அடையாள அட்டையின்மை என்பன இனங்கானப்பட்டதுடன் அவ்வாறான 12 பஸ்வண்டி உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட்டதுடன் இறுதி எச்சிரிக்கையும் விடப்பட்டது.

எவ்வித பாதை அனுமதிப்பத்திரமின்றி காத்தான்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் இரு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்வண்டிகளுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்;யவும் நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதிகார சபையின் புதிய சுற்று நிருபத்தின்படி இக்குற்றங்கள் நீதிமன்றத்தால் நிருபிக்கப்பட்டால் இரு பஸ்வண்டிகளுக்கும் தலா ரூபா 1இலட்சம் தொடக்கம் 2இலட்சம் வரை தண்டப்பணம் அறவிட முடியுமெனவும் இன்னும் ஒரிரு மாதகாலத்துக்குள்; இவ்வாரான தொடர் நடவடிக்கைகள் மூலம் அனைத்து பாதை அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளை சேவையிலிருந்து அகற்றி பயணிகளின் அசௌகரியத்தை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கமுடியுமென்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் உருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்.