மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் உள்ள மக்கள் தொடர்பில் சில அதிகாரிகளும் பொது அமைப்பின் பிரதிநிதிகளும் பிழையான கருத்துகளை தெரிவித்துவருவதாக கோரியும் தமது நிலையினை அனைவரும் புரிந்துகொள்ளுமாறு வலியுறுத்தியும் பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றது.குறித்த திண்மக்கழிவு நிலையத்தினால் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவந்துள்ள நிலையில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் குப்பைகள் கொட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு கடுமையான எதிர்ப்பினை திருப்பெருந்துரை மக்கள் தெரிவித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குவியும் குப்பைகளினால் நாளாந்தம் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் அவற்றினை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

இதன்போது திருப்பெருந்துரை பகுதி மக்களை அப்பகுதியில் இருந்து அகற்றுமாறு சிலர் கூறிவருவதுடன் 35குடும்பங்களே பாதிக்கப்படுவதாக சிலர் தவறான வகையில் பேசிவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பெருந்துறை பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் குப்பைகள் கொட்டுவதனால் திருப்பெருந்துறையில் உள்ள அனைத்து மக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு நகரில் உள்ள மக்களும் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மழைகாலத்தில் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீர் மட்டக்களப்ப வாவியுடன் கலப்பதனால் மட்டக்களப்பு மாவட்டமே பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றர்.

எமது பிரச்சினையை அனைவரும் புரிந்துகொண்டு தமக்கு ஆதரவு வழங்கமுன்வரவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாங்கள் மட்டக்களப்பு நகரில் குப்பைகள் அகற்றப்படவேண்டும் என்பதை மறுக்கவில்லை.ஆனால் அதனை இங்கு கொட்டாமல்வேறு ஒரு இடத்தினை மக்கள் இல்லாத இடத்தில் கொட்டுமாறே கேட்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், திருப்பெருந்துறையில் மக்களின் பிரச்சினை அக்கரையுடன் அனைவரையும் நோக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் உள்ளுராட்சி அமைச்சு உள்ள நிலையில் இதற்கான விரைவான தீர்வினை எடுக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

தெற்கில் அனர்த்தம் நடைபெறும்போது உடனடியாக செயற்பட்டு அதனை சில தினங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் மட்டும் முறையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை கவலைக்குரியது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.