மட்டக்களப்பில் கழிவுகளை கொட்டிய தனியார் வைத்தியசாலை –கிளர்ந்தெழுந்த பொதுமக்கள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பெரிய உப்போடை பகுதியில் தனியார் வைத்தியசாலையின் கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையினை பொதுமக்கள் தடுக்கமுற்பட்டபோது அங்கு பதற்ற நிலையேற்பட்டது.

மட்டக்களப்பில் இயங்கும் பிரபல தனியார் வைத்தியசாலையில் உள்ள கழிவுகளை பெரிய உப்போடை வாவிக்கரை வீதியில் உள்ள தனியார் காணியொன்றில் கொட்டமுற்பட்டபோதே இந்த நிலைமையேற்பட்டது.

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் குப்பைகொட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு வைத்தியசாலை கழிவுகளை கொட்டமுற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாவிக்கு அருகில் இவ்வாறு தனியார் கழிவுகளை கொட்டி புதைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ள்பட்டதாகவும் இதனால் இப்பகுதியில் எதிர்காலத்தில் பாரிய சூழல் பாதிப்பு பிரச்சினையேற்படும் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது ஸ்தலத்திற்க வருகைந்த மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் கொட்டப்பட்ட கழிவுகளை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அத்துடன் சட்டத்திற்கு முரணாக குறித்த பகுதியில் வைத்தியசாலை கழிவுகளை கொட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு குறித்த தனியார் வைத்தியசாலைக்கும் அதனை கொட்டியவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.