அத்தியாவசிய பொருட்களுக்கு விலைய அதிகரிப்பவர்களுக்க எதிரான கடும் நடவடிக்கை –அமைச்சர் ரிசாத்

சீனி உட்பட 12 அத்தியாவசிய பொருட்களுக்கு விலைகளை தன்னிச்சையாக அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்ட இலங்கையின் 378வது சதோச விற்பனை நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்எஸ்.எஸ்.அமீர்அலி கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் முதன்முறையாக அரச விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

விவசாயிகளும் வறுமை நிலையில் உள்ள மக்களும் அதிகமாக வாழும் இப்பகுதி மக்கள் பயன் அடையும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நிறைவடைவதற்குள் 500 சதோச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.

சீனி உட்பட 12 பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு நேற்று வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பொருட்களுக்கு நினைத்தவாறு விலைகளை அதிகரிக்கமுடியாது.

சீனிக்கான தீர்வை விலையை 10ரூபாவினால் அதிகரித்ததற்காகவும் அதன்காரணமாக நுகர்வோருக்கான சீனியின் விலையினை வர்த்தகர்கள் அதிகரிக்கமுடியாது எனவும் தெரிவித்த அமைச்சர் இவற்றினை கண்காணிப்பதற்காக 200அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.