கம்பளை சிறுவனை கடத்தியவர்களுக்கு விளக்கமறியல் -வானும் மீட்பு

கம்பளையில் கடத்தப்பட்ட சிறுவன் மட்டக்களப்பு கரடியானறு உறுகாமம் கிராமத்தில் வைத்து6.5.2017 சனிக்கிழமை மீட்கப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

 கடந்த புதன்கிழமை கம்பளை கங்கவட்ட வீதியைச் சேர்ந்த மூன்று வயதான   முஹம்மத் சல்மான் மற்றும் சிறுவனது உறவு முறையான முகம்மட் அசாம் என்பவரும் காணாமல் போயிருந்தனர்.

பின்னர் காணாமல் போயிருந்த சிறுவனை அழைத்துச் சென்ற அசாம் என்பவர் மீள திரும்பிய நிலையில் அவரை கைது செய்து அவரிடம் மேற் கொண்ட விசாரணையையடுத்து மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள  உள்ள உறுகாமம் கிராமத்திலுள்ள வீடொன்றில் வைத்து சனிக்கிழமை காலை சுமார் 10:30மணியளவில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை கொண்டு வரும் பொலிசார் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரசேத்தில் வைத்து கணவன் மனைவி ஆகிய இரு சந்தேக நபர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள இன்னுமொரு சந்தேக நபரை தேடி வருவதாகவும் குறித்த நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. அத்தோடு இந்த சிறுவனின் கடத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சிறுவனின் உறவு முறையான ஒருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்த சிறுவனை கம்பளையிலிருந்து கடத்தி வருவதற்கு பயன்படத்தப்பட்ட 253-9097 எனும் இலக்கமுடைய டொல்பின் வேனையும் திங்கட்கிழமை பிற்பகல் காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியதுடன் குறித்த வேன் சாரதியான முகம்மட் நழீம் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த வேன் வேனின் சாரதியான முகம்மட் நழீம் என்பவருக்கே சொந்தமானதாகும். இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு பேர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 18ஆம் திகதிவரையில் குறித்த நான்கு பேரையும் விளக்கமறியலில் வைத்ததுடன் அன்றைய தினம் கம்பளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

சனிக்கிழமை கைது செய்யப்பட்ட ஜெஸ்மின் மற்றும் ஹஸனத்தும்மா ஆகிய இரு பெண்களும் மற்றம் சிறுவனை கடத்துவதற்காக சிறுவனை அழைத்துச் சென்ற சிறுவனின் உறவுமுறையான அஸாம் என்பவரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரசேத்தைச் சேர்ந்த முகம்மட் சர்ஜுன் மற்றும் எம்.றிபான், எம்.றியாஸ் மற்றும் பாலமுனை பிரசேத்தைச் சேர்ந்த எம்.றாபி அவரது மனைவியான எஸ்.ஹபிலா ஆகிய ஐந்து சந்தேக நபர்களையும் வேன் சாரதியுமாக மொத்தம் 9 பேர் இதுவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதில்  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலிருந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களில் றியாஸ் மற்றும் றாபி ஆகிய இருவரும் முன்னாள் ஊர்காவற் படை வீரர்கள் எனவும் இவர்கள் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வர்த்தக நிலையமொன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அந்த சிறுவன் கடத்தப்பட்டிருப்பதாகவும் கடத்தியவர்கள் சிறுவனை விடுவிப்பதற்கு 30 இலட்சம் ரூபா கப்பம் போரியிருந்த நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் கிராமத்தில் வைத்து சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

உறுகமம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் வைத்தே சிறுவன் மீட்கப்பட்டார் சிறுவனை கடத்திய சந்தேக நபரான சிறுவனின் உறவு முறையான அஸாம் எனும் இளைஞன் பதுளை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்து குறித்த சிறுவனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரிய வருகின்றது.

உறவினரான இளைஞனிடம், குறித்த பெண் (சிறுவனின் தாயார்) வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ள, கடையில் பயணியாற்றும் தன்னுடைய கணவனுக்கு பகல் சாப்பாட்டை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் 2:30க்கும் இடைப்பட்ட நேரத்தில் கொடுத்து அனுப்பியுள்ளார்.

அதன்போது, வீட்டிலிருந்த சிறிய மகனும், அந்த இளைஞனுடன் செல்லவேண்டுமென அடம்பிடித்துள்ளார். ஆகையால், அந்த இளைஞனுடன் சிறிய மகனையும் அந்தப் பெண் அனுப்பிவைத்துள்ளார்.

எனினும், குறிப்பிட்ட இளைஞன், தன்னுடைய கணவன் இருந்த இடத்துக்குச் செல்லாமல், மகனுடன் தலைமறைவாகிவிட்டார் என சிறுவனின் தாய் செய்த  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.