தமிழ் நுண்கலை பட்டதாரிகள் தொடர்பான விடயங்கள் மறைக்கப்படுகின்றன –பட்டதாரிகள் குற்றச்சாட்டு

நுண்கலை பட்டதாரிகள் தொடர்பிலான விடயங்கள் மறைக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கில் உள்ள தமிழ் நுண்கலைதுறை பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 77வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் நியமனம் வழங்கப்படும்போது நுண்கலை பட்டதாரிகள் தொடர்பில் சந்தேகம் தெரிவிக்கப்படுவதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.அண்மையில் கூட தமிழ் அமைச்சர் ஒருவர் நுண்கலை தொடர்பிலான கருத்துகளை வெளியிட்டுள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த பாடசாலைகளில் நுண்கலை தொடர்பான பாடநெறிகளை அதற்கு தொடர்புபடாதவர்களே கற்பித்தில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் நுண்கலை கல்வியை இல்லாமல்செய்யும் வகையிலேயே நுண்கலை பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் கவனமான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.