கல்குடா மதுபான மூலப்பொருள் உற்பத்திச் சாலையின் பின்னால்.....(கட்டுரை)

(இமயவன்)

கல்குடாவில் சுமார் 19 ஏக்கர் நிலப்பரப்பில் மதுபாணத்திற்கான மூலப்பொருளான எதனோல் தயாரிப்பதற்காக ஒரு தொழிற்சாலையின் கட்டட நிருமாணப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்தவேளையில் அண்மையில் 'மட்டக்களப்பின் படித்த புத்திஜீவிகள் குழு' மட்டக்களப்பு மக்கள், அரசியல்வாதிகளுக்கு கல்குடா மதுபான மூலப்பொருள் உற்பத்திக்கான தொழிற்சாலைக்கு ஆதரவாக தெளிவுபாடுத்தும் ஒன்றுகூடல்களை மேற்கொண்டு வருகின்றது. உண்மையில் இப்படியொரு குழுவானது இந்த மதுவிற்காக உருவாக்கப்பட்டமையையிட்டு முதலில் மட்டக்களப்பான் என்ற வகையில் நானும் வெட்கித் தலைகுனிகின்றேன்.

முதலில் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என்ன வென்றால் நான் எந்தக் கட்சியும் சாராத ஒருவன், அதே போன்று என் இனத்தை அதிகமாக நேசித்தாலும், மற்ற இனங்களையும் நேசிக்கத் தெரிந்த ஒரு இலங்கை வாழ் தமிழன்.

இந்த கல்குடா மதுபான உற்பத்திச் சாலை தொடர்பாக ஆரம்பத்தில் மக்களிடையே வெளிப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள்தான். அவர் கடந்த வருடத்திலேயே வெளிப்படுத்தியிருந்த தகவலை மக்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் பெரிதுபடுத்தாமல் விட்டதுதான் இன்றைய நிலைக்குக் காரணம். ஏனெனில் மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரையில் 'தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்னதான் கூறினாலும் அது வேதவாக்கு. அதேபோன்று மாற்றுக் கட்சியின் பிரதிநிதி கூறினால் அது ஒரு குப்பைச் சாக்கு. ஆம் அப்படித்தான் அன்றைய சந்திரகாந்தனின் கருத்தை நாம் அனைவரும் சிறியதொரு விடயமாகப் பார்த்தோம். அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவும் இல்லை.

கட்டப் பணிகள் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடங்களின் பின்னரே அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் விழிப்படைந்தோம். உண்மையில் இதனை விழிப்படையச் செய்வதில் மட்டக்களப்பின் ஊடகவியலாளர்கள் பெரும் பாங்காற்றியிருக்கின்றார்கள் என்று சொல்வதை விட தமது உயிராபத்தையும்கூட பொருட்படுத்தாது மக்களிடையே இந்த விடயத்தை கொண்டு சேர்த்திருக்கின்றார்கள். இதற்குப் பின்னர் ஒரு சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன், யோகஸே;வரன் ஆகியோர் மக்களோடு மக்களாக ஆர்ப்பாட்டம் மற்றும் பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதற்கு மாறாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கன் போன்றவர்கள் மதுபான உற்பத்திச் சாலையின் நிருவாகத்துடன் அல்லது அதற்குச் சார்பான அல்லது அதற்கு ஆதரவு வழங்குகின்ற உயர்மட்ட குழுக்களுடன் இணைந்து இந்த மதுபான சாலை அவசியமானதே என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்பதை விட தமது பூரண ஆதரவை தெரிவிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

புதிதாக முளைத்துள்ள மட்டக்களப்பின் புத்திஜீவிகள் குழு என்ற அமைப்பானது இந்த மதுபான சாலையின் நிருவாகத்திற்கு மகிழ்வூட்டும் வகையில் இது எமது மண்ணை செல்வச் செழிப்பில் கொண்டு செல்லக்கூடியது, எனவே நாம் ஆதரவு வழங்கவேண்டும் என்ற கருத்தை அனைவரிடத்திலும் குறிப்பாக ஊடகவிலாளர்கள் மற்றும் மக்களிடையே நுழைத்து வருகின்றது. ஒரு தொகைப் பணத்தையும், வசதி வாய்ப்புக்களையும் சலுகைகளாகப் பெற்றுவிட்டு, அதற்கு நன்றிக்கடனாக மேற்கொள்ளும் சதித்திட்டம்தான் இந்த புத்திஜீவிகளின் விழிப்புணர்வு நடவடிக்கைகள். அதுவும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியிலிருந்துதான் இவாகள் செயற்படுகின்றாhகளாம். புத்திஜீவிகள் என்று கூறுகின்றவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். உண்மையில் உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் விலைபோகவில்லையென்று. அப்படி விலை போகவில்லையென்றால் சாதாரணமாக ஊடகவியாளாகளுக்கும், மக்களுக்கும் பிழையாக அல்லது பாதிப்பான விடயமாகத் தெரிகின்ற மதுபான சாலையானது, உங்களுக்கு மட்டும் சரியாகத் தெரிகின்றதென்றால் உங்கள் புத்திதான் கெட்டுப்போய்விட்டதா?. ஐயா கலாநிதி பிரேம்குமார் அவர்களே, நீங்கள் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்திற்கு தலைவராகவும், பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகவும் பதவி வகித்தீர்கள். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்திருக்கின்றீர்கள். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டம் சார்பான பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடாபான எத்தனை ஆய்வுகளைச் செய்துள்ளீர்கள். அல்லது உங்களது பீடத்தில் உள்ள மாணவர்களுக்கு எமது பிரதேசத அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஆய்வத் தலைப்புக்களை வழங்கும்படி வலியுறுத்தினீர்களா? தேவையென்றால் உங்களது பதவியுயர்வுக்கும், பட்டத்திற்குமாக சில ஆய்வுகளைச் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அல்லது இளைஞர்களுக்கு தொழில் வழங்கக் கூடியதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான தொழிற்சாலைகள் தொடர்பில் ஆராய்ச்சிகள் அல்லது முன்மொழிவுகள் அல்லது செயற்றிட்டங்கள்தான் உங்களிடம் உள்ளதா? புத்திஜீவிகள் என்று பிதற்றிக் கொள்ளும் குழுமத்தினரே.

மட்டக்களப்பில் சுமார் 1000 பேருக்கு மேல் தொழில்வாய்ப்பையும், விவசாயத்திலிருந்து குறிப்பாக நெற்பயிரிலிருந்து வரும் வைக்கோலையும் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய வாழைச்சேனை காகித ஆலை தொடர்பில் உங்களால் ஏன் கருத்துக்கூறப்படவில்லை. அதுதொடர்பில் ஆராய ஏன் முற்படவில்லை. அதேபோன்று கும்புறுமூலைப் பிரதேசத்தில் இயங்கிய அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை மீண்டும் இயக்குவது தொர்பாக ஏன் ஆராய முற்படவில்லை. அடுத்ததாக களிமண் வளம் நிறைந்த படுவான்கரையின் இலுப்பையடிச்சேனையில் அமைந்திருத் ஓடு சார்ந்த உற்பத்திச் சாலை தொடர்பில் உங்கள் மூளை சிந்திக்கவில்லையா? ஏன் இவற்றையெல்லாம் விட இன்று எமது பெரும்பாலான வருமானத்தில் குடித்தே சீரழிந்து சென்று கொண்டிருக்கும் தமிழ் சமூகம் தொடர்பில் விழிப்பூட்டத்தான் உங்களது அறிவு இடம்கொடுக்கவில்லையா?. எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள் சுயநலவாதிகள்தான், உங்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்பதே உண்மையாகும்.

மதுபாண உற்பத்திச் சாலையின் அமைவு தொடர்பில் முன்வைக்கப்படும் சாதகமான கருத்துக்கள்.

1. தொழில்வாய்ப்பு கிடைத்தல்
2. எமது பிரதேச நெல், சோளம் போன்றவற்றிற்கு நியாயமான விலை கிடைக்கும்.

இவற்றில் தொழில்வாய்ப்புக் கிடைக்கும் என்பது உண்மையான விடயம்தான். ஆனால் இந்த எதனோல் உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்க்கிலும், அதிகளவு தொழில்வாய்பபை ஏற்படுத்தக்கூடிய கடதாசி ஆலை, மீன் உற்பத்தி ஆலை, பாற்பொருள் உற்பத்திச் சாலை, ஓட்டுத் தொழிற்சாலை போன்ற பல உற்பத்திச் சாலைகளை எமது மாவட்டத்தில் அமைத்தாலே கிட்டத்தட்ட 10000 பேருக்கு மேல் நேரடி வேலைவாய்ப்பும் மறைமுகமாக பலருக்கும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தும்.

அடுத்ததாக நெல், சோளம் என்பவற்றுக்கு எமக்கு அதிக விலையில் கொள்வனவு செய்வார்களாம். முஸ்லிம் வியாபாரிகளிடம் எமது தமிழ் மக்கள் ஏமாந்துபோகத் தேவையில்லையாம். இது பொருத்தமில்லாத கருத்து. ஏனெனில் பெரும்பாலான எமது தமிழ் விவசாயிகள் வறியவர்கள். பெரும்பாலும் முஸ்லிம் வியாபாரிகளிடம் கடனுக்கு முன்பணம் பெற்றே தமது விவசாயத்தை ஆரம்பிக்கின்றார்கள். விளைவுகளை அவர்களிடம் குறைந்த விலைக்கு விற்று தமது கடனை அமைக்கின்றார்கள். இங்கு முதலில் இப்படி யோசிப்பவர்கள் முதலில் என்ன செய்திருக்கவேண்டும் நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்வது தொடுபாக ஏதாவது ஒரு வழிவகையை முன்வைத்திருக்கவேண்டும்.

தற்போது விவசாயிகள் தமது கடனை அடைத்துவிட்டு , தமது வீட்டுத் தேவைக்கும் தமது வீடுகளில் சேமித்து வைக்கிறார்கள். பணம் இல்லாத வேலைகளிலும் தமது வீட்டில் உள்ள நெல்லைக் குற்றி, ஏதாவது ஒரு கறி சமைத்துக்கூட சிலர் சாப்பிடுகின்றார்கள். ஏதோ அவர்கள் பட்டிணி இல்லாமல் வாழ்கின்றார்கள். ஆனால் இந்த அதிக விலையில் நெல் கொள்வனவு என்றவுடன் தமது உணவிற்கும் கூட விற்காமல் அனைத்தையும் விற்றுவிடுவார்கள். பின்னாளில் அதிக விலையில் அரிசியைக் காசு கொடுத்து வாங்கி உண்ணவேண்டி நிலைக்கு வந்துவிடுவார்கள். பணம் தீர்ந்துவிட்டால் பட்டிணி அல்லது கடன் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கடன் தொல்லையும் அதிகரித்துவிட்டால் தற்கொலை செய்வதற்குக் கூட துணிந்து விடுவார்கள். இவ்வாறு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். இன்னும் விளக்கமாக இங்கு சொல்லவேண்டியதில்லை.

எனவே அரசியல் வாதிகளே கொஞ்சம் சிந்தியுங்கள், ஊடகவியலாளர்கள் எடுக்கும் கரிசனைகூட சில அரசியல் வாதிகளிடம் இல்லை. அதேபோன்று இந்த மதுபான மூலப்பொருள் உற்பத்திச் சாலையை நிறுவும் உரிமையாளரே நிருவாகவே எம்மக்களின் வாழ்வு பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.

நீங்கள் இந்த புத்திஜீவிகளுக்கு பணம்கொடுத்து சாதித்துக்கொள்வதைவிடுத்து எமது மக்களது வாழ்வை முன்னேற்ற யோசியுங்கள். இந்த ஆலையை எமது மாவட்டத்தின் சனநடமாட்டமுள்ள பகுதியில் அமைப்பதை விடுத்து எல்லைப் புறப் பிரதேசமொன்றில் அமைக்கலாமல்லவா?. எமது மாவட்டத்து இளைஞர்களுக்கு தொழில்வழங்கும் பெரிய குணம் உங்களுக்கு இருந்தால் இந்த ஆலைக்குப் பதிலாக நான் மேலே கூறியபடி காகித ஆலை, மீன் பதப்படுத்தும் ஆலை, பாற்பொருள் ஆலை போன்றவற்றை தங்களால் மேற்கொள்ள முடியும்தானே. அதற்காக எமது வளத்தில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றன. உங்களது அரசியல், பணபலத்தால் இந்த ஆலைக்கு எதிரான கருத்துக்களை சிதைத்துவிட பலவாறும் சிந்திக்கும் தாங்கள் ஏன் அதே பணபலத்தையும், அரசியல் பலத்தையும் எமது மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தக்கூடாது. உங்களுடைய பக்கத்தில் இருந்து பார்க்கும்போது உங்களது ஆலை உங்களுக்கு சரியாகவே படும். எமது பக்கத்திலிருந்தும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

- மட்டக்களப்பு வாழ் தமிழன்- இமயவன் -