கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கின்றோம் -மட்டு.பட்டதாரிகள்

கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் மூலம் தமது போராட்டம் வெற்றியடையும் என தாங்கள் நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 85வது நாளாகவும் இன்றும் இடம்பெற்றுவருகின்றது.

தொடர்ச்சியாக இரவு பகலாக பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் இன்று பல தடைகளையும் தாண்டி சென்றுகொண்டுள்ளது.

இந்த நிலையில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படுவது தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இதுவரையில் ஆக்கபூர்வமான தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கவனத்திற்கு தங்களின் போராட்டம் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் நடவடிக்கையெடுக்கப்படுவதாக காட்டப்பட்டபோதிலும் அதுவும் காணல்நீராக போய்விடுமோ என்ற அச்சம் பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளணி அனுமதி கிடைத்தும் இதுவரையில் திறைசேரியின் அனுமதி கிடைக்காத நிலையில் பட்டதாரிகளுக்கான தீர்வினை வழங்கும் வகையில் விசேட அமைச்சரவை கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அறிகின்றோம்.

முதலமைச்சர் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கை மூலம் தமது போராட்டம் வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்புடன் தீர்க்கமான ஒரு முடிவினையும் வழங்குவார் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

காலம் காலமாக வாக்குறுதிகளை தந்து ஏமாற்றுவதை போன்று இம்முறையும் முதலமைச்சரின் நடவடிக்கை அமையாது என நம்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகிழக்கில் கற்ற சமூகம் ஒன்று வீதியில் கிடப்பதை வடகிழக்கு அரசியல் தலைமைகள் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.