அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜின் 67வது ஜனன தின நிகழ்வுகள்

இலங்கையில் எந்த துறவிகளும் செல்லாத கிராமங்களுக்கு அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் சென்று சேவையாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 67வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜின் சிலையருகில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக தலைவர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவாமியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு விசேட பூஜைகளும் நடைபெற்றதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

67 நாடுகளுக்கு சென்று ஆன்மீக பணியாற்றிய பெருமையும் அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜுக்கு மட்டுமே உள்ளது.தனது ஆன்மீக பணியின்போது பல்வேறு இன்னல்களை சந்தித்தார்.

இந்து மதத்திற்காக தனது சொத்து சுகங்களையும் சுகபோகங்களையும் துறந்து பழத்தை மட்டுமே உணவாக கொண்டுவாழ்ந்துவந்தவர் சுவாமி. அவ்வாறான அற்பு துறவியை நாங்கள் இழந்துவிட்டோம் என்றார்.