மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் தமிழின படுகொலை நாள் அனுஷ்டிக்க ஏற்பாடு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மே 18 ம் திகதியை தமிழின படுகொலைகளை நாளாக  அனுஷ்டிக்க உள்ளதாக  சிவில் சமூக அமைப்புக்கள் பல  கூட்டாக அறிவித்துள்ளன.



இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18 ம் திகதியை வடகிழக்கின் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க படவேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக  முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்
 முதல் தடவையாக மட்டக்களப்பில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து மே 18 ம் திகதியை தமிழின படுகொலை நாளாக அடையாளப்படுத்தி அன்றைய தினம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.



எனவே எதிர்வரும் மே 18 திகதி மாலை 5 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்வுள்ள அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.



குறித்த அஞ்சலி நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களின் ஒன்றியம் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் சர்வமத தலைவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட பல சிவில்சமூக அமைப்புக்கள் இணைந்து நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் குறித்த தினத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலைகள் நடைபெற்ற இடங்களான கொக்கட்டிச்சோலை சத்துருக்கொண்டான் புதுகுடியிருப்பு சித்தாண்டி கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு  விளக்கேற்றி அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதைவிட  இரண்டு அரசியல் கட்சிகள் வாகரையில் குறித்த முள்ளிவாய்க்கால் நிகழ்வை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.