கல்லடி பாலத்தில் குடும்பஸ்தர் குதித்தாரா? – மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு தட்டார மாரியம்மன் ஆலய வீதியை சேர்ந்த நிர்மலன் என்ற 41வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கல்லடி பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது.

இன்று பிற்பகல் 2.30மணியளவில் கல்லடி பழைய பாலத்தில் மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் அங்கு கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் பாதணிகள் கிடப்பதைக்கண்டு மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மட்டக்களப்பு வாவியில் தேடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேநேரம் குறித்த நபர் இரண்டு மணியளவில் தனது மனைவிக்கு கையடக்க தொலைபேசிமூலம் அழைப்பினை ஏற்படுத்தி பிள்ளைகளை கவனமாக பார்க்குமாறு கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்ததாகவும் அதனைத்தொடர்ந்து தொலைபேசி இயங்கவில்லையெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.