மட்டக்களப்பில் சாரதிகளினால் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பகுதிகளில் கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு விபத்து சம்பங்கள் அதிகரித்த நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ஐ.ராஜபக்ஸ தெரிவித்தார்.


விபத்துகள் அற்ற வீதிகளை அமைக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்னும் தலைப்பிலான வீதி போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டம் ஒன்று மட்டக்களப்பு நகரில் இன்று திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு இன்று காலை காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ஐ.ராஜபக்ஸ கலந்துகொண்டு சாரதிகளுக்கான போக்குவரத்து தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து காந்தி பூங்காவில் இருந்து வீதி பாதுகாப்பின் அவசியத்தினை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு சாரதிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் கோட்டைமுனை சந்திவரையில் நடைபெற்றது.

கோட்டைமுனைசந்தியில் உள்ள பெற்றோல் நிலையில் அகண்ட திரையில் போக்குவரத்து விதிகள் தொடர்பிலான வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நகரில் முச்சக்கர வண்டி சேவை உட்பட பல்வேறு போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் சாரதிகளும் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துதெரிவித்த மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ஐ.ராஜபக்ஸ,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு விபத்து சம்பங்கள் அதிகரித்துள்ளன.ஜனவரி மாதம் தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் சத்துருக்கொண்டான் தொடக்கம் கல்லடிப்பாலம் வரையில் 98 விபத்து சம்பங்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்து சம்பவங்களின்போது மூன்று உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 30பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் 51க்கும் மேற்பட்ட சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.அத்துடன் இந்த விபத்துகளினால் 14 வாகங்கள் முழுமையான சேதமடைந்துள்ளன.

கூடுதலான விபத்துகள் வாகனங்களை ஓட்டுபவர்களின் கவலையீனத்தால் இடம்பெறுகின்றன.வாகனங்கள் சிறந்தமுறையில் பராமரிக்கப்படாத காரணத்தினாலும் விபத்துகள் இடம்பெறுகின்றன என்றார்.