மட்டக்களப்பில் வெள்ளநீர் வழிந்தோடும் மூன்றில் இரண்டு பகுதியில் சட்ட விரோத கட்டிடங்கள் -மட்டு.ஆணையாளர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மூன்றில் இரண்டு பகுதியான நீர்த்தேக்கங்கள் நிரப்பப்பட்டு பொதுமக்கள் சட்டரீதியற்ற கட்டிடங்களை கட்டியுள்ளதன் காரணமாக மழைகாலங்கள் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படவேண்டிய நிலையேற்படுவதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொத்தனிமுறையிலான வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபையின் கொத்தனி வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு,பார்வீதியில் நடைபெற்றது.

பார்வீதியில் நீர்தேங்கி நிற்கும் தோணா பகுதி கொத்தனி வேலைத்திட்டத்தின் கீழ் துப்புரவுசெய்யும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் சித்திரவேல் உட்பட பிரதேசசபைகளின் செயலாளர்கள்,ஏறாவூர் நகரசபை,ஏறாவூர்பற்று பிரதேசசபையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் நகரசபை,ஏறாவூர்பற்று பிரதேசசபை ஆகியன மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து இந்த கொத்தனி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கருத்து தெரிவித்த ஆணையாளர்,

இந்த கொத்தணி வேலைத்திட்டமானது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் சிந்தனையில் உதித்தசெயற்பாடாகும்.அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி அமைப்புகள் கொத்தனியாக இயங்கி ஒவ்வொரு பிரதேசத்திலும் இருக்கின்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டமாக இது இருக்கின்றது.

மட்டக்களப்பு மாநகரசபையினை பொறுத்தவரையில் மூன்றாவது முறையாக இந்த கொத்தணி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஏறாவூர் நகரசபை,ஏறாவூர்பற்று பிரதேசசபை மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து ஒவ்வொரு பகுதிகளிலும் இரண்டு இரண்டுவேலைத்திட்டங்களை முடிவுறுத்தியுள்ள போதிலும் மட்டக்களப்பு மாநகரசபையில் மூன்றாவது வேலைத்திட்டமாக இது செயற்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் வளம்குறைந்த உள்ளுராட்சிமன்றங்கள் வளம் நிறைந்த உள்ளுராட்சி மன்றங்களுடன் வளங்களை பகிர்ந்துகொண்டு அந்த வளங்களை உச்சமட்டத்தில் பயன்படுத்தி மக்களுக்கு சேவைசெய்வதாக அமையும்.அந்த அடிப்படையிலேயே இந்த மூன்று உள்ளுராட்சிசபைகளும் வளங்களை பகிர்ந்து இந்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமான செயற்படுத்திவருகின்றோம்.

எதிர்வரும் காலத்தில் வரவுள்ள மழை காலத்தினை கருத்தில்கொண்டு இந்த தோணாவினை நாங்கள் துப்புரவுசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளோம். அதிகமான தோணாக்கள் மக்களினால் முறையற்ற வகையில் அபகரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.

சிலரின் சமூகசிந்தனையில்லாத செயற்பாடுகள் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளது.

மழைகாலங்களில் வெள்ள நீர் வடிந்தோடும் வகையில் இயற்கையான வடிகான்கள் இருந்தன.மட்டக்களப்பு மாநகரசபை பகுதிகளில் நீர்தேங்க நிற்கும் 102 இடங்கள் கடந்த காலத்தில் இருந்துள்ளன. மூன்றில் இரண்டு பகுதியான நீர்த்தேக்கங்கள் நிரப்பப்பட்டு பொதுமக்கள் சட்டரீதியற்ற கட்டிடங்களை கட்டியுள்ளதன் காரணமாக மழைகாலங்கள் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படவேண்டிய நிலையேற்படுகின்றது.அந்த வெள்ளகாலத்தில் மட்டக்களப்பு மாநகரசபையையே மக்கள் நொந்துகொள்ளும் நிலைமையினையும் நாங்கள் காண்கின்றோம்.

சட்ட ரீதியான கட்டிடங்களை கட்டுவது தொடர்பான ஏற்பாடுகளை அது தொடர்பான அதிகாரசபை மற்றும் மாநகரசபையுடன் இணைந்துசெயற்படும்போது இவ்வாறான நிலைமைகளை தவிர்;த்துக்கொள்ளமுடியும்.