முன்னாள் போராளிகள் சர்வதேசத்தின் உதவியுடன் உடல் பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் -ஜனா

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் சோதனைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பாலசுப்ரமணியம்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊட்டப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 23 இலட்சம் ரூபா செலவில் மூன்று வகுப்பறைகளைக்கொண்டதாக இந்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

கடந்த காலத்தில் பெரும் இடநெருக்கடி காரணமாக தற்காலிக கொட்டகைகளில் மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிலையில் மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் மேற்கொண்ட முயற்சி காரணமாக இந்த கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலை அபிருத்தி சங்க உறுப்பினர்கள்,பெற்றோர் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர்,
பாடசாலை தொடர்பான செயற்பாடுகளில் அனைத்து பேதங்களையும் மறந்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும்போதே அந்த பாடசாலையினையும் அந்த சமுதாயத்தினையும் கட்டியெழுப்பமுடியும்.

1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் வடகிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி.யினால் வழக்கு தொடரப்பட்டு பிரிக்கப்பட்டது.அதன்பிரிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் கல்வி அதிகாரமும் அடங்கும்.எனினும் அந்த அதிகாரத்தில் பலவற்றினை மத்திய அரசாங்கம் கையில் எடுத்துக்கொண்டு மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நிலைப்பாட்டினை எடுத்துவருகின்றது.

மத்திய அரசாங்கத்தின் கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் கல்விக்காக அதிகளவு நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் அந்த ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணசபைக்குரிய பங்கு மாகாணசபைக்கு கிடைக்கப்பெறவில்லை.

ஆயிரம்பாடசாலை திட்டம்,அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்திட்டம் என்ற தொனிப்பொருளில் மத்திய அரசாங்கத்தினாலேயே அந்த நிதிகள் செலவிடப்படும் நிலையிருக்கின்றது.மாகாணசபைக்கு அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமானால் நாங்கள் மாகாணசபை ஊடாக தேவையறிந்து பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நிலையிருக்கும்.

இன்று இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணசபைகளின் முதலமைச்சர்களும் ஒன்றாக இணைந்து அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும் காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்,முழுமையான அதிகாரப்பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும்போது அந்த அதிகாரங்களை பயன்படுத்து தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யமுடியும்.அந்த மாகாணத்தில் எந்த பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டும் என்பது அந்த மாகாணங்களை சார்ந்தவர்களுக்கே தெரியும். அதனை அறிந்துசெய்வார்கள்
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர்.யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வெடிச்சத்தங்கள் ஓய்ந்ததன் பின்னர் எமது பிரதேசம் அபிவிருத்திசெய்யப்பட்டதா என்றால் இல்லையென்றே சொல்லமுடியும்.

1989ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரையில் இந்த நாட்டில் ஐ.தே.க.ஆட்சிக்காலம் இருந்தது.அந்த காலப்பகுதியில் ஐ.தே.க.அரசாங்கம் இலங்கை மக்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றவர்தான் இந்த மகிந்த ராஜபக்ஸ.

2005ஆம்ஆண்டு தொடக்கம் 2015ஆம்ஆண்டு வரைக்கும் சுமார் பத்து ஆண்டுகள் முடிசூடா மன்னனாகவும் இராணுவ அதிகாரி போன்றும் இந்த நாட்டினை ஆட்சிசெய்தார்.அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் கொத்துக்குண்டுகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் கொன்றொழிக்கப்பட்டனர்.பல ஆயிரம் கோடி சொத்துகள் அழிக்கப்பட்டன.அந்த கொடூர ஆட்சி 2015ஆம் ஆண்டு சிறுபான்மை சமூகத்தினால் மாற்றப்பட்டது.

பதவி ஆசைகொண்ட மகிந்த ராஜபக்ஸ மீண்டும் இந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றவேண்டும்,மீண்டும் இந்த நாட்டில் கொடூர ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக தான் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பாதயாத்திரையை மேற்கொண்டுவருகின்றார்.

இன்று சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதியினர் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வு வழங்கவேண்டும் என சிந்திக்கின்றனர்.அவர்களுடன் வடகிழக்கில் ஒரு நிரந்தர தீர்வு வரவேண்டும் என விரும்பும் தமிழ் பேசும் மக்களும் ஒன்று சேர்வதன் மூலம் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை எந்தக்காலத்திலும் இந்த நாட்டில் கொடூர ஆட்சியை நடாத்திய மகிந்த ராஜபக்ஸவினால் கைப்பற்றமுடியாது என்பதை அவருக்கு சுட்டிக்காட்டவேண்டும்.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது.இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.விடுதலைப்புலிகளின் முன்னணி போராளிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர்.அவர்களில் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி புனர்வாழ்வுபெற்று குடும்ப வாழ்வில் இணைந்து வாழ்ந்துவந்த நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.அந்த மரணத்தில் சில சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டபோதிலும் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஆனால் இன்று பல முன்னணிப்போராளிகளாக இருந்தவர்கள் படிப்படியாக மர்மமான முறையில் மரணிக்கும் நிலையிருந்துவருகின்றது.முன்னாள் போராளிகள் இறந்துகொண்டிருப்பது அரசியல் பிரச்சினையாக உருவெடுப்பதற்கு முன்னர் அதற்கு தீர்வுகாணப்படவேண்டும் என அமைச்சர் சரத் அமுனுக கூறியுள்ளார்.

இறந்த போராளிகளை நாங்கள் ஆய்வுக்குட்படுத்த முடியாவிட்டாலும் முன்னணி போராளிகளாக சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் சோதனைக்குட்படுத்தவேண்டும் என நாங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல்கொடுக்க முன்வரவேண்டும்.அரசியல் ரீதியாக குரல்கொடுக்கவேண்டும்.

அனைத்து போராளிகளும் சோதனைகளுக்கு உட்டுபத்தப்படவேண்டும்.கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவர்களை இது தொடர்பில் கேள்விக்குட்படுத்தவேண்டும். அவர்களை போர்க்கால குற்றவாளிகளாக அடையாளப்படுத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் வடகிழக்கில் ஒன்றாக வாழவேண்டும்.1977ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து வாழ்ந்ததன் காரணமாக பல விடயங்களை சாதித்துள்ளனர்.அந்த நிலைமை மீண்டும் ஏற்படுத்தப்படவேண்டும்.

எங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை தீர்த்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகள் முதல் முன்வரவேண்டும்.சிறுபான்மை சமூகத்திற்குள் இருக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தங்களுக்குள் இருக்கும் கசப்புணர்வுகளை நீக்கி அதன் மூலம் இரு சமூகத்திற்கு மத்தியில் உள்ள கசப்புணர்வுகளை நீக்கவேண்டும்.

வடக்கிழக்கில் இரண்டு இனங்களும் ஒன்றாக வாழ்வதற்கான அத்திபாரத்தினை நாங்கள் இடவேண்டும்.பொதுபலசேனா,ராவய போன்ற அமைப்புகளினால் முஸ்லிம்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர்.இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம் அப்பிரதேசம் அபிவிருத்தியடையும் என்றார்.