மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை நிலவுகின்றது.

இன்று இரவு பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு திராய்மடு பிரதேச மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் பல காலமாக வர்த்தகர் ஒருவர் அப்பகுதியில் அடாவடித்தனங்களை மேற்கொண்டுவந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த வர்த்தகரினால்; இரு இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.அதனைத்தொடர்ந்து பிரதேச மக்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வர்த்தகர் மீது ஆத்திரம்கொண்ட பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர்.இந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் தொடர்பில்; பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் உட்பட பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கும் பிரதேச மக்களினால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்த வர்த்தகர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.அதேவேளையில் குறித்த வர்த்தகரை தாக்கியதாக கருதப்படும் ஆறு இளைஞர்களும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வர்த்தகரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுதலைசெய்யுமாறு கோரியும் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராய்மடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டிருந்த நிலையில் பெண்கள் கைக்குழந்தைகளுடனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுதலைசெய்யவேண்டும் வர்த்தகர் கைதுசெய்யப்படவேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்ததன் காரணமாக இந்த செய்தி எழுதும் வரையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.
இதேவேளை குறித்த வர்த்தகரை கைதுசெய்யும் வகையில் பெருமளவான பொலிஸார் திராய்மடு பகுதியில் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடைபெற்றுவருவதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.